- நினைவில் காடுள்ள மிருகம்
சந்தைக்குள்ளிருந்து கவுச்சி தெறிக்க பறந்திட எவ்வும் கானகம்
பச்சை வாடையை குளிரக் குளிர உதறத் தெரியாமல்
டீ கிளாசுடன் நிற்கும் கூலியாட்களை
உற்று நோக்குகிறது
ஆவி பறக்கும் வயிற்றுக்குள்
கூச்சல் போடும் உயிரை
லோக்கல் மார்க்கெட் வரை பிடித்துக்கொள்ள
எதுவெல்லாமோ உதவலாம்தான்
சில்லறையாகத் தேறுவது என்னவோ
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் நண்பகலும்
உடல் சூடு தணித்துக்கொள்ள இன்னோர் உடலும் மட்டுமே
உறவுகளை புளிச்சென்று தெருவில் துப்பிவிட
தெரிந்து வைத்திருக்க வேண்டும்
ஊர் ஊராக நேஷனல் பெர்மிட்டுடன் சுமந்தலையக் கூடாது
பின்னிரவு ஆந்தைகள் அலறியபடி அழைக்கும்போது
ஒதுங்கிக்கொள்ள
காடு மட்டுமே கொஞ்சம் பெரிய மனது வைத்து
இடம் கொடுக்கிறது காமம் தணிக்க
நெஞ்சைப் பிளந்தோடும் நெடுஞ்சாலைகள்
ஊர்களை உறவுகளை குடும்பங்களை இணைத்துக்கொண்டு
சந்தையைக் கடைவிரித்து ஆகப் போவது என்ன
- குப்பைகள் சுழலும் காற்றில்..
முகம் தாழ்ந்து கருத்திருக்கிறது
நீயுன் பவிசிலிருந்து
கீழே இறங்கு
இதற்குமேல் செய்ய ஒன்றுமில்லை
முதலிலிருந்து தொடங்கிட கண்டுபிடித்தாக வேண்டும்
ஒரு புதிய தெருமுனையை
பின்னகர்ந்து விரையும் கடிகார முள்ளில்
எதையெல்லாம் ஏவலாம்
காழ்ப்புகள்
துரோகம்
வயிற்றெரிச்சல்
வஞ்சம்
இன்னும் வேறென்ன
ஒவ்வொரு கீழ்மையிலும் ஏதோவொரு சாக்காடு
அல்லது
திரும்பி வருதலின் உத்தரவாதம் உள்ளது
அதைத் தொட்டு
முரணுக்கு முரண் பதிலாகின்ற சந்தர்ப்பங்களை
மீண்டும் நிகழ்த்திட
காத்திருக்கத்தான் வேண்டும்
அந்தப் பழையத் தெருமுனையில்
- அன்பிலார்..
வழித்தடங்களின்மீது சிந்தியுள்ளன
சில கைத்தட்டல்கள்
குனிந்து பொறுக்கி எடுத்துக்கொள்ள
ஒரு கையெழுத்து வேண்டும்
அதுவோ
நன்னடத்தையின் கால் செருப்பை
வாசலில் விட்டுவிட்டு வரும்படி கண்டிக்கிறது
வராண்டாவில் வாய் பொத்தி நின்றபடி
இரு கைகள் விரித்து யாசிக்கிறோம்
ஓர் அபத்தத்தை
அதுகாறும்
எங்கள் முகத்தில் பச்சை நிறத்தில் ஒரு சீல் குத்தி
வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்
தாளாளரே
மானத்தைக் கட்டியிழுத்துக்கொண்டு ஒரு நகர்வலம் விட
கொஞ்சம் கழுதைகளைப் பெற்றுத்தரச் சொல்லி
கடவுளுக்கு கடிதம் போட்டிருக்கிறோம்
பதில்
அடுத்த தபாலிலேயே வந்துவிடும்
- காந்த முள்
பரந்து விரிந்த மனத்தின் எல்லை
ஒரு வாக்குறுதிக்குப் பிறகு
வெறும் உள்ளங்கை அகலத்திற்குள்
குறுகிவிடுகிறது
தருணங்களை மீறி
திசைகளுக்கான பாதைகளும்
அங்குதான்
ரேகைகளாகி கிளை விரித்திருக்கின்றன