நினைவின் அலைக்கழிப்பில்
அங்கும் இங்குமாய் நடந்து போன நாட்களை நெம்புகோலால் கிளறி
வெறிச்சோடி கிடக்கும் இந்நொடிப் பொழுதில்
மறுபடியும் கட்டவிழ்கிறது குரூரமான ஓர் அகதியின் தனிமை….
வேர்களை வளரவிட்டு
கூர் முனைக் குத்தூசியால் தோலுரித்து
நிர்வாணமாக்கப் பட்ட மரத்தின்
ரணத்தை இப்போது நுகர்கிறது
நெஞ்சு…
எடுப்பிலேயே எக்காளமிடும்
ஆலாபனை கூட
அறிவுரைகளாகிப் போனது..
புரிதலற்றவனின்
அன்பும்
புரிந்து கொண்டவரின்
அவதானிப்பும்
இம்சிக்கும் பொழுதுகளில்
பிரசவிக்கிறேன்
நீயும் நானும் ஓரே ஆடையை உடுத்திக் கொண்ட
அத்தனிமையின் தகிப்பை ….!