-
சொல்
நேர் X எதிர்
எனும் சொற்களில்
மனித வாழ்வின் பரிமாணங்களை
நிறுத்துப் பார்க்கிறோம்.
திறக்கப்படாத காடிகளுக்குள்
புளிப்பின் சொற்கள்
நொதித்துக் கொண்டிருக்கிறது
தாளித்த வாசத்திற்கும்
கருகிய வாடைக்கு மிடையில்
சொற்களைத் தூரமாக்காதீர்கள்
பயன்பாட்டின் பொருண்மியங்களில் தங்கியுள்ளது
சொற்களின் பயன் மதிப்பு
தடித்த சொற்கள்
உதிரங்களை உறையப்பண்ணும்
பிரிவு X சேர்வு
எனும் சொற்கள்
நீங்கள் உதிர்க்கும் சொற்களின்
வினைப்பயன் சார்ந்தமையும்
யுகங்களின் ஆறாத தழும்பிற்கும்
மருந்திடும் சக்தியுண்டு
அன்பான ஒரு சொல்லிற்கு.
-
சசாகியின் கொக்குகள்
அவளுக்குத் தெரியும்
நான்
எத்தனை கொக்குகளைச் செய்தாலும்
மீண்டுவர முடியாதென்பது.
நினைவிழக்கும் நாள்வரை
அவள் செய்துவைத்த கொக்குகள்
அச்சத்தில் படபடத்துக் கொண்டன.
அவளின் இரத்த அணுக்களில்
நஞ்சேற்றியவர்கள்
மாபெரும் அநியாயக்காரர்கள்
வதைபடும் வாதையை
அவள் விருப்பின்றி வழங்கிய
குற்றவாளிகளின் ஆன்மா
இன்னமும் அமைதியாக உறங்குகிறதா?
அபாயகரமான அணுக்கதிர்களில்
அபலைகளின் குரல்கள்
யுகத்திற்கும் தீராத் தழும்பானது.
சசாகி இன்னமும்
தங்கக் கொக்கை
ஏந்தி நிற்கிறாள்.
நீங்கள் இன்னமும்
காற்றில் கந்தகத்தை
வீசுவதை நிறுத்தவில்லை.
நாங்களும்
உயிர்த்தெழும் பேரவாவில்
செய்துகொண்டே இருக்கிறோம்
ஓரிகாமி கொக்குகளை
இன்னுமின்னும் சசாகிகள்
தங்கக் கொக்குகளை ஏந்தாதபடிக்கு.
Art Courtesy : DeviantArt