1)
உயிர்த்தடமெங்கும்
ஊடுருவிய
உணர்விழைகளை
ஒற்றை ஸ்பரிசத்தில்
உயிர்ப்பித்து விடுகிறாள்
மாயக்காரி..
மனம் முகிழ்த்து
மலரத் தொடங்குகையில்
“எல்லாம் மாயை தான்”
காதுக் குழையசையத்
தலையசைத்து
மெல்ல சொ (கொ)ல்கிறாள்.
அறிந்தே அமிழ்கையில்
அறிந்தே சிக்குகையில்
மாயக்கட்டுகளை
அறுத்தெறிய
யாரால் ஆகும்?
நேற்றிருந்த
அதே வானம் தான்
அதே நிலவு தான்
ஆனாலும் கண்சிமிட்டிய
அந்த நட்சத்திரத்தை தான்
காணோம்.
இசைத்து முடித்த
குரல்களில்
வேப்பமரத்துக் குயிலுடையது
எது?
வனம் எங்கும்
பூத்து மணம் வீசும்
மலர்களில்
எதன் வாசம் எதனுடையது?
உரித்துப் போட்ட
சட்டையும்
உமிழ்ந்து வைத்த
விடமும்
கானுக்கு புதிதல்ல.
அகச்சரடுகளில்
விரவிக் கிடக்கும்
வக்கிரங்கள்
உக்கிரமாய் வெளிப்படுகையிலும்
கலையாத மௌனங்கள்
கழுவிலேற்றப்படட்டும்
பேசத் தெரிந்ததனால்
நீ
எதை சாதித்து விட்டாய்?
சொற்களை
வாரி இறைத்ததைத் தவிர…
ஆதரவாய் இருப்பதாய்
ஆறுதலளிப்பதாய்..
அன்போடிருப்பதாய்…
அடுக்கடுக்காய்
வித விதமாய்
சொற்களை
விரித்துப் போடுகிறாய்..
பேசிப் பேசிப்
பாசாங்கிற்கும்
பவித்திரத்துக்கும்
வேறுபாடறியாத வண்ணம்
சொற்களுக்குள்
புகுந்து கொள்கிறாய்..
ஒவ்வொரு கொடூரத்துக்கும்
ஒவ்வொரு அநீதிக்கும்
நெஞ்சு நடுங்குவதாய்
பிலாக்கணம் படிக்கிறாய்..
இத்தனை முறை
நடுங்கிய இதயம்
அதே இடத்தில்
நிலைகொண்டிருப்பது எப்படி?
உன்னைவிட
பேசத் தெரியாத
மலையும் காடும் கடலும்
எவ்வளவோ மேல்…
Image Courtesy : behance.net