cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 20 கவிதைகள்

பாபுபிரித்விராஜ் கவிதைகள்


அலை

நெல்லளைந்து போன
அழகிய கால்கள்
சிறு மலைக்குன்றின்
வடிவொன்றில்
ஏறிச்செல்கிறது

சலனங்களின் மொத்த
கணங்கள்,
நிலம் அசையாது
காண்கிறது

நிற்கும் ஒரு மரம்
இலையுதிர்க்காது
அசைய
முயற்சிக்கிறது

மீண்டும் மீண்டும்
மீன்கள் தீண்டாத
அழுக்காக
கரையொதுங்குகிறது

அரங்கம்,
நடனமாடியபடி
ஆடலின் ஒரு துளியை
எங்கெங்கிலும் தெளிக்கிறது.

ஏகம்

ஒற்றைத்தட முடிவில்
வாணவேடிக்கை
ஒரு பூமரம்.

எதிர்த்துப் போனபோது
படமெடுத்து நின்ற
நாக நதி.

பிரியும் இருளின்
ஆணிவேர் தெரிய
ஒளிரும் அந்தரம்.

கலைந்தாடும் விரிசடையில்
சிதறாது உறைந்த
ஒற்றை பிறை.

உச்சியிலறைந்து
அழுத்திப் பிடித்து
இருமை களைந்த வெயில்.

ஒரு குமிழி நீடிப்பதில்
விடுதலையான
மூச்சுக்காற்று.

அழகிய மலரின் அழகை
எப்போதும் மூடிவைத்த
என் விழிகள்.

கிழித்தெறிந்த
காகிதத்திலிருந்து
ஒரு வார்த்தை
காற்றினில்
பறக்கிறது
வானை அளவெடுத்து
வரும் பறவையைப் போல
சட்டென
ஞாபகத்தில்
வந்தமர்கிறது
அதன் வேர்ச்சொல்
அது
கிளை பரப்பும்
திசைகளத்தனைக்கும்
இடமளிக்கிறது
ஆகாயம்
தரையெல்லாம்
உதிர்ந்து கிடக்கிறது
திசைகளின் வாசனைகள்.

ன்னலுக்கு வெளியே
தூரத்தில் நகர்ந்து போகும்
அத்தனையும்
மௌனமாகவே
செல்கின்றன

திரும்பப் பெறாமல்
போவதில்லை
அத்தனை வேகத்திலும்
இந்தப் பயணம்

ஓரிரு குழந்தைகளின்
கையசைவை
தரிசிக்கையில்
அம்மௌனம்
அதே வழியில்
வெளியேறிக் கொண்டிருந்தது..


Art Courtesy : directoryofillustration.com

About the author

பாபு பிரித்விராஜ்

பாபு பிரித்விராஜ்

நாகர்கோவிலில் பில்டிங் இண்டீரியர் தொழில் செய்துவரும் பாபு பிரித்விராஜ் எழுதிய " இம்மொழி பெருங்கூடு " எனும் தலைப்பில் எனது கவிதைத் தொகுதியை 2022-ஆண்டு வாலறிவன் பதிப்பகம் மூலமாக நெல்லை பொருநை புத்தகக் கண்காட்சியில் கவிஞர் லெக்ஷ்மி மணிவண்ணன் தலைமையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பிற்கு கவிஞர் கலாப்ரியா முன்னுரை எழுதியியிருக்கிறார்.

இவரின் கவிதைகள் "அரூ " "மயிர்" இணைய இதழ்களிலும், கணையாழி அச்சு இதழிலும் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website