துயிலெழுவாய்
உன் தொந்தி சரிய
உயிர் வளர்த்தவன்
காக்கையாய் குருவியாய்
நம்மை காத்திருப்பதாக சொன்னாய்
தங்கையும் நீயும்
தாழிட்டுத்தூங்கிய பின்னிரவில்
சன்னலையும் கதவையும் இடையறாது அறையக்கேட்டு
திடுக்கிட்டு எழுந்தவள்
யாரோ
காரில் மறைவதென
கொடுவாளோடு
சாமமெல்லாம் தேடியலைந்தாய்
ஊருக்கு வந்தவன் சேதி கேட்டு
சதையை படுக்கையில் கிடத்தி
கண்கள் மட்டும் மூடிக்கொண்டேன்
என் ஆவி நம் வாசலில் காவலிருக்கிறது
காக்கையும் குருவியும்
வெட்டி முறித்த களைப்பில்
இரவெல்லாம்
அயர்ந்து தருக்களில் தூங்கிக்கொண்டிருக்கட்டும்
நாம் இருவரும் காவலிருப்போம்
நீ கொடுவாளோடும்
நான் காக்கை குருவி தூங்கும் கவலையோடும்.
படையல்
”குடிச்சி குடிச்சி கொடல் வெந்து
பீடி புடிச்சி புடிச்சி
நொரையீரல் சுருங்கி
சாவப்போரடா பாவீ”
என்று சதா பாடிக்கொண்டவள்
“படையலுக்கு
உங்கப்பனுக்கு
ஒரு கட்டு கணேசு பீடியும்
ஒரு கோட்ரு பாட்லும் வாங்க்கினு வாடா”
என முந்தானை அவிழ்த்து பணம் தந்தனுப்புகிறாள்
படைத்தாகி
அப்பாவின் வேட்கை
அம்மாவின் குடலில் நீந்துகிறது.
கணுக்காலிகள்
கணுக்காலிகளாய் ஊர்கிறாய்
நான் கூசிப்போகிறேன்
உன் நினைவுக்கால்கள்
என்னை அலைகழிக்கிறது
உடனே உன்னை உதிர்த்துவிட நான் தவிக்கிறேன்
விழுந்தும் பிழைக்கவேண்டி
ஓர் மழைகாலத்தையும்
புல் தோட்டத்தையும்
நான் தேடியலைகிறேன்
ஆனால்
என் தோல்கள் ஒரு கணமும்
உன்னை உதிர்ப்பதாகவேயில்லை.
சுருக்குக்கயிறின் கொலை
எல்லோரிடமும் சிரித்துப்பேசின யாமத்தில்
யாருக்கும் தெரியாமல்
கதவுகள் தாழிட்டு
கழுத்தை உத்திரத்தில் ஏற்றினாள்
தயங்கித் தயங்கி அறைக்கு நகர்ந்தவனின் கண்கள்
தூக்குக்கயிறிலே நிலைகுத்தி நிற்க
அனிச்சையாய் கேட்டான்
“நீ தான் அவள் கழுத்தை இறுக்கினாயா?”
“இல்லை
முதலில் சுருக்கி என்னைக் கொன்றபின்பே
அது நிறைவேறியிருக்க வேண்டும்”
Art Courtesy : Benedetto Cristofani Illustration