யாரோ என யாரோ அறிந்திருந்தார்கள்
கனவில் தோன்றிய படிக்கட்டுகளில்
என்னை நான் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன்
கதவுகள் பொருத்தப்பட்டிராத வாசலை
இதுவரையில் யாரும் வந்தடையவில்லை
பரஸ்பரம் நிகழ்ந்த உரையாடல்களின் பாதை
வெறிச்சோடி கிடக்கிறது
மனமற்ற வெளிகளை அசுத்தப்படுத்திப் பார்க்க
கைவசம் சொற்பமாகவேணும் இருக்கின்றன
தகாத சொற்கள்
பெயர்ப்பட்டியல்களில் இருந்து முழுமையாக நீங்கச் செய்வது
ஓர் அவசரத் தேவையாக இருக்கும்பட்சத்தில்
வாத்திய இசைத்தொகுப்புகளைத் தொடர்ந்து
கேட்டுக்கொண்டிருக்கும்
மனநிலையை
சுவரில் ஓவியமென தீற்றி வைக்க
என்னை அழைத்திருந்தேன்
வேறொன்றும் நிகழவில்லை இசை நின்றபாடில்லை
பார்த்ததைப் பார்த்தபடியே தொடர்கிறது
சலனம்
கடந்திட வேண்டாத பாதை தனில்..
சிறுமியின் கைவிரல் நகங்கள் உடைந்துவிட்டதாக
புகார் வந்தபோது
பார்பி பொம்மையின் தலை எதிர்ப்பக்கமாக
திரும்பியிருந்தது
கண்சிமிட்டல்களை அலைகழிக்கச் செய்துவிட
சாளரத்தினூடே மெலிந்து நுழையும் வெயிலின் நிறத்தை
துணைக்கு அழைத்துக்கொண்டாள்
பொழுதினை குறை சொல்லுவதற்கும் வாய்ப்பு இருந்தது
சடைப் பின்னலை ஒத்தி வைக்கும்படி
கறாராக உத்தரவிட முடியாது
முட்டிக்கொண்டிருக்கும் அழுகையின் மேகங்கள்
இமைகளைத் தாண்டிடாத கட்டுப்பாட்டில்
அவளின் காலடியில் முளைக்க
தொடங்கின
கானகத்தின் நிறத்தில் கோபக் காளான்கள்
சமன்பாட்டின் வரிசைகளுக்கு அப்பால்..
ஒவ்வொன்றும் ஏமாற்றும்போது அவற்றுக்கான
தொழில்நுட்பம்
அசாதாரணங்களை ஈர்ப்புக்குள்ளாக்குவதாக
இரவில் கதை பேசினோம்
உம் கொட்டிக்கொண்டிருந்தன நட்சத்திரங்கள்
பகலிரவு நாட்களோ துருவ திசைகளோ
காலக்கணக்கை
பொய்த்துப் போகச் செய்திட
எத்தனிப்புகள் வேண்டி வளர்க்கப்பட்ட
நெருப்பில்
சடசடவென சுள்ளிகளைப் போல வெடிக்கின்றன
தருணங்கள்
அவற்றில் குளிர்காய்ந்துகொள்ள ஏதுவாக
அடைப்புக்குறியாகும் உள்ளங்கை குகைக்குள் ஒளிரும்
ரேகைகளில்
பிரபஞ்சத்தின் நிழல் பாதையை விரிவாக்கம் செய்கிறது
குறுநகையின் ஒரு முனை
அருகிருந்தும் தொலைவுகளோடு..
நள்ளிரவில் வார்த்துக்கொண்ட அணைப்பின் அச்சில்
நேசத்தைக் கதகதப்பாக்குகிறது
குவளையில் கொதிக்கின்ற தேயிலை நீர்
முத்தத் துகள் அத்தனையும் கீழ்மட்டம் நோக்கி
மிதந்தலையும் நீச்சலில்
காமத்தின் சுவை தொண்டைக்குழியில்
ஒட்டிக்கொள்கிறது
பிறகு
ஒரு பேச்சின் ஊடே கிளர்ந்தெழும் ஏதோ ஒரு சொல்
வேண்டுவது அர்த்தத்தை அல்ல
அணுக்கத்துடன் நெருக்கிப்பிடித்து
இன்னும் கொஞ்சம் இருந்துகொள்ள
இன்னுமோர் குவளையை
அடைப்புக்குறியாகும் உள்ளங்கை குகைக்குள் ஒளிரும்
ரேகைகளில்
பிரபஞ்சத்தின் நிழல் பாதையை விரிவாக்கம் செய்கிறது
குறுநகையின் ஒரு முனை/ ஆஹா.. அருமை அருமை. உங்கள் கவிதைகள் தொடர்ந்து வாசிப்பவன் நான்..!
நன்றி சுந்தர் இசக்கியப்பன் தோழர்.
அன்பும் மகிழ்வும்.
எப்போதும் கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் தனித்துவ சிறப்பே! குரலும் கவிதைக்கு ஈடு கொடுக்கிற உணர்வு!
நன்றி அனிதா குமரன் தோழர்.
அன்பும் மகிழ்வும்.
அருமையான கவிதை நான்கும் நண்பா. நனைத்து நனையாமல் பெய்யும் மழையில் மகளே தயாரித்து தந்த தேநீரின் சுகம்.
தலைப்பில் இருந்து ஒரு நூலளவும் நழுவாத கவிதை. குரல் சிலைக்கு கண் வைக்கிறது. சகோதரிக்கு வாழ்த்துகள்.