cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 கவிதைகள்

ப.தமிழ்ச்செல்வன் கவிதைகள்


  • கலையும் காற்றின் வழி

காலி இடத்தை நிரப்புவதில்
எந்தவொன்றும் பொருந்தாமல்
அதுவேற்படுத்தும்
மன அபிலாஷைகளை
இனங்கண்டுரைப்பதில்
தோன்றும் ஏமாற்றம்
விவரிக்கவியலாமல் போகிறது.

தோற்றப்பிழையென்றோ
மறைமாற்றமென்றோ
கருதவிட முண்டெனினும்
மனச்சூழல் மறுக்கிறது ஏற்றுணர.

கடந்துவிட முடியுமெனினும்
நிலைபெற்றிருக்கும் காலத்தை
நகர்த்தும் முயற்சியின்
முடிவமைகிறது பெரும்பான்மையாகவும்
வெற்றியைத் தவிர்த்தே.

விரும்பும் வடிவம்
கலையும் காற்றின் வழியில்,
கரம் பற்றிச்செல்ல
தயாராகவே இருக்கிறேன்
காலத்தின் கரையில்
முப்பொழுதிலும்.

  • நிழலைப்பரப்பி இருத்தல்

மிகுந்த கவனம் கொண்டதாக
ஆக்கிக் கொண்டு விட்டது
என்னை விடவும்
எனது நிழல்.

ஈர்ப்பினை பெற
உடனழைத்து சென்றது
செல்லும் இடமெங்கும் நிழல்
என்னையும்.

காட்சி கொணரும்
புறவுலகின் தருணங்களில்
தன் குறித்த
பரப்புதலைப் படரச்செய்கிறது
சினேகம் கொள்பவர் / கொள்ளாதவர்
அனைவருக்குள்ளுமாக.

பார்வைக்கு எட்டாத
நிழலின் மீதான பிரியம்,
பார்வைக்குக் கிடைத்த
நிழலின் மீதான அச்சம்
விரட்டுகிறது என் சுயத்தை.

எல்லாவற்றிலும்
தன்னை படியவிட்டு
நானெனும் நிஜத்தை
ஞாபகமகற்றி நிலைபெறுகிறது
என் நிழல்.


 

About the author

ப.தமிழ்ச்செல்வன்

ப.தமிழ்ச்செல்வன்

அருணந்திசிவம் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் ப.தமிழ்ச்செல்வன்; கணிப்பொறி அறிவியல் துறையில் முதுகலைப்
பட்டமும், இதழியல் மற்றும் மக்கட்தொடர்பியலில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்று, முதுகலை கணினி ஆசிரியராக நயினார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். புகவு பதிப்பகத்தை தொடங்கி
நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

உனக்குள் அடங்கிய நான், மூடப்படாமலிருந்த கதவு, புணர்தலும் நிமித்தமும் ஆகிய தலைப்புகளில் இவரது 3 கவிதை தொகுப்புகள் 2006 –2008 காலங்களில் வெளிவந்துள்ளது. இவரது நான்காவது கவிதைத்தொகுப்பான இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி 2020ல் வெளியாகியுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website