- மனுஷப்பய
பெரியவனுக்கு இருப்பதிலேயே
பெரிய அறை
சின்னவள் ரசனைக்காரி
கலர் கலர் பூக்களோடு
பூந்தோட்டம் மாதிரி
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நான்கு பேருக்கான அறை
தாத்தா பாட்டிக்கு அற்புதம்
எனும் அளவுக்கு
கெஸ்ட் வந்தால் போனால்
மெச்சத்தக்க அளவு
எல்லாம் தந்த சாமிக்கு
நுழைஞ்சு வெளிய வர்ற
அளவுக்குத்தான்
பூஜை ரூம்
மனுஷ பய மகத்தான
சல்லி பய தான் போல.
- அநாதி காலம்
இன்முகத்தின் இரைச்சலை
என்னவென்று வடிப்பது
வெட்டுண்ட கனவுக்குள்
எட்டிக் குதிக்க
கிணறு செய்யலாம்
தனித்த வறட்சி ஒன்று
நெல்மணி கொறித்த
நித்திரை அலகுகளில்
ஆங்காங்கே கீறிக் கிடக்கும்
காலப்பசி
யுத்தம் முடிந்து விட்டது
என தானாக ஓர் எண்ணம்
கண்ணும் கருத்துமாக
கீழிறங்க தவிக்கும் கழுகிற்கு
ஞாபக மறதி சாத்தியம் தான்
பொருள்பட அருள் கிடைத்த
ஆட்டுவிக்கும் அத்தனை
ஆசைகளின்
அடிவார தகவமைப்புகளில்
ஆளுக்கொரு திசையை
அசைத்துப் பார்க்கிறது
அநாதி காலம்
எல்லாவற்றையும்
வாங்கிக் கொண்டு
எதையாவது கொடுக்கவும்
செய்கிறது
பசியும் காலமும்……!
- தலைகீழ் தவம்
தலைகீழ் தவத்தில்
தாகமற்ற சிந்தனைக்கு
வௌவால் சிரிப்பு
நீண்டு வளைந்து
சாலை கடக்கையில்
ச்சீ என இருக்கும் வாலில்
பாம்புத் திமிர்
மூக்கில்லாத கல்லொன்றை
சுற்றி சுற்றி பார்க்கையில்
கண் திருகும் காற்றின் கனம்
தத்தம் தானை தகிட தகிட
தாளத்தில் தானென
தோலுரிக்கும் நத்தைத்தனம்
ஆற்றுக்குள்ளிருந்து
குபுக்கென எட்டிப்பார்க்கும்
சனி நீராடும்
காட்டு தீக்குள்
நிழலை வைத்தேன்
வெந்தும் வேகவில்லை நினைப்பு
- புலரி மேயும் கொடிது
நித்திரையில் நின்னையே
ரதி என்று எழுப்பும்
முகத்திரையற்ற போதெல்லாம்
முகர்ந்து பார்க்கும்
ஜன்னலோரம் சனியை போல
வந்தமரும்
ரயில் பயணமென்றால்
ரண வேதனை தான்
காடு கடக்க நேரிட்டால்
ஆதி தேடி அருவி வடிக்கும்
கடல் பார்த்து நின்றுவிட்டால்
பாதசுவற்றில் பனி மலரும்
பூக்கடை தாண்டினால்
பூலோகம் மணக்கும்
மலைப் பயணத்தில் பேருந்து உருட்டும்
பேரின்பம் இருட்டும்
புற்களில் மேய்ந்திடும்
புலரியொன்றில் புல்லாங்குழல்
மினுங்கும்
மழை வந்தால் மதம் பிடிக்கும்
யுகம் கடந்திட்ட முகவுரை
தன்னையே படிக்கும்
கண் பார்த்து பேசும் வெயிலுக்குள்
சிலை நடிக்கும்
மரண வீட்டில் பாவனை சேர்க்கும்
மரத்தடியில் மானுடம் வியர்க்கும்
இளமையில் வறுமை போல
கொடிது கொடிது
காலம் முழுக்க கவிதை கொடிது…!
- நிலா குட்டிகள்
குட்டி போட்டிருக்க வேண்டும்
நிலவின் வெண்ணொளியைத்
தாங்க முடியவில்லை
பழுப்பு வாசத்தில் நிகழ்ந்த பிரசவம்
என்னைப் பதற வைக்கிறது
முசுமுசு வெளிச்சத்தில்
முகம் நிறைந்த வாசத்தில்
ஆர்ப்பரிக்கிறேன்
ஓடித் திரியும் ஒளிகளின் பின்னால்
கண்கள் நிறைந்து
கைகள் விரிந்தலைவது
தாங்கொணா சிலிர்ப்பு
தொற்றும் ஒளி தாங்கா தவிப்போடு
திறந்து கிடக்கும் வானத்தை
மெல்ல இழுத்து பூட்டுகிறேன்
ஒவ்வொரு பொத்தானிலும்
அடைபட தொடங்குகின்றன
நிலா குட்டிகள்