காதல் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தன எனக்கு
அப்படி ஒன்று இருக்கிறதா என்பது அதில் முதலாவது.
***
காதல் மீது வெகு தாமதமாகவே ஆர்வம் பிறந்ததெனக்கு
கண்களை இழந்தபின் ஓவியத்தின் மீது ஆர்வம் தோன்றுவதைப் போல,
காதலை வெகு சிரமத்திற்குப் பின்னே நான் வசப்படுத்தினேன்
கண்களை இழந்தபின்பு தேர்ந்த சிற்பியாகும் ஒரு பித்தனைப்போல
***
காதல் சார்ந்த எனது விருப்பம் மிக எளிதாக இருந்தது
ஒரே ஒரு கவிதை என்பதாக
காதல் சார்ந்த எனது விருப்பம் மிகச் சிரமமானதாக இருந்தது
எனக்கான ஒரு கவிதை என்பதாக
****
நான் நிறைய நிறையக் காதல்கள் செய்தேன்
உங்கள் விரல்களின் எண்ணிக்கைக்கு நிகராக,
அல்லது
அதை விட அதிகமாக
ஒரு அலைபோல் எனைச் சுருட்டி மீண்டும் கரையிலேயே துப்பிய ஒரு காதல்
தரை பிளந்து நான் நழுவிய போது கரம் நீட்டி மீட்ட ஒரு காதல்
சிறிய நாய்க்குட்டி போல் கால்களுக்கிடையே முட்டி முட்டி முனகும் ஒரு காதல்
தனித்த பாறைமேல் அமர்கையில் எல்லாம் சட்டெனக் காட்சிதரும்
ப்ரத்யேக வானவில் போன்றதொரு காதல்
அம்பறாத் தூணி முழுக்க கவிதை நிரப்பிக் கொணர்ந்த ஒரு காதல்
****
திகட்டத்திகட்டக் காதலித்ததில் எனக்குப் பல தெளிவுகள் பிறந்தன
எல்லாக் காதல்களிலும் நான் இருந்தேன் என்பதும்,
சில காதல்களில் நான் மட்டுமே இருந்தேன் என்பதும்
அதில் இறுதியானது
Awesome ..அழகு
அருமை…