மழை வந்திருக்கிறது
துணி மடித்து முடிக்க வேண்டும்
மழை வந்திருக்கிறது
வீடு கூட்டிக் கொண்டிருக்கிறேன்
மழை வந்திருக்கிறது
களைப்பாக இருக்கிறது
மழை வந்திருக்கிறது
உள்ளுக்கும் வெளிக்கும் தூரம்
வெறும் பத்தடிகள் தானா…
மழை போய்விடக் கூடும்
எந்த நேரமும் …
வேண்டுவதெல்லாம் ஒரு முனைப்பு
ஓடிச் செல்லும் கால்கள்
என்றாலும் பேசாமலிருக்கிறேன்
ஆம் மழை போகட்டும்
தெருவெல்லாம் நடந்து முடிந்து
மீண்டும் ஒரு முறை திரும்பி வந்து
வந்தேன் வந்தேன் என
ஈரக் கால்களால் மண்ணெங்கும் தடமிட்டுப் போகட்டும்
இலைச் சொட்டுகளில் தெறிக்கிற இசையில்
தொந்தரவூட்டும் இதயத் துடிப்பைப் பதித்துப் போகட்டும்
மடக்கப்படும் குடைகளில் தெறிக்கிற திவலையாய்
மழை முடிந்த நிசப்தத்தின் குளிர்ந்த தொடுகையாய்
மரப்பட்டைகளின் அடர்ந்த ஈர வாசனையாய்
பாதமெங்கும் ஒட்டிக் கொள்ளும் செம்மண் வண்ணமாய்
அழிக் கம்பிகளின் பனிக்கட்டிச் சுவையாய்
கசிந்து பரவும் மழையின் ரகசியக் கடிதம்
இன்றின் கனம் சுமக்க அந்தச் சிறிய அன்பே போதும்.