- நதியின் அடுத்த பிறவி
கண்ணுக்கு புலனாகாத
புதிர் ஒன்றாய்
அரூபக் குரலில் உச்சரிப்பாய்
மின்னலுக்கு பளிச்சிட்டு
மறைந்து கொள்ளும் கோட்டோவியமாய்
பறந்த மினுமினுப்பில்
பட்சிகள் பார்க்கும் மிரட்சியாய்
எப்போதாவது நீங்கள்
உணரலாம்….
அதில்
நதிக்கரையில் பேசிக் கொண்டிருக்கும்
அவர்கள்
சற்று நேரத்தில் மீன்களாகி
நீருக்குள் போய் விடுவதை
காணத்தான் வேண்டும் என்பதோடு
நீங்கள் முணுமுணுக்கலாம்…
அதற்கு முன்
நதியை கண்டு பிடித்தவரின்
வயிற்றுக்குள் அவர்கள்
சூல் கொள்ளலாம்…
அதற்கும் முன்
செய்ய வேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
மணலோடு விளையாடி…. மணலோடு
கலவி கொள்ளுங்கள் அவர்களாகி.
நதியற்ற ஊரில்
நம்பிக்கை பிறகெப்படித்தான்
பிறக்கும்….?
- மணக்கும் கனவுகள் அவளுடையவை
அதிகாலை அந்திமாலை
முன்னிரவு பின்னிரவு
நடுநிசி
எப்போதும் அவள்
காணக்கிடைப்பாள்
குளிரூட்டிய முகத்தோடு தான்
வலம் வருவாள்
மணக்கும் கனவுகள்
அவளுடையவை
தெருக்குழாயில் அவள் முறைக்கு
தேன் சொட்டுவதாக
வீதிப்பெண்கள் கற்பனை
சுங்கிடிப் புடவை மிடி
குட்டைப்பாவாடை
தாவணி, சுடி, பேண்ட் சட்டை
அவரவர் சார்ந்தது அவளாடை
இளையராஜா ரஹ்மான் தேவா
சில நாட்களில் எம் எஸ் வீ கூட
வீடெங்கும் இசையாகும்
வீணை அவள் பாடு
ஜன்னல் திறந்திருந்தால்
விடுமுறை என்று அர்த்தம்
தலை விரிந்திருக்கும்
தவம் கலைந்திருக்கும்
அவள் வாசலை ஆண்
பாதங்களே முப்பொழுதும்
அளவெடுக்கின்றன
அள்ள அள்ள குறையாத
அந்த பாதங்களை
மாதம் மூன்று நாட்கள் மட்டும்
அள்ளி எடுத்து சுத்தம் செய்கிறாள்
அதாகப்படுகிறது
அவளாக்கப்பட்டது…!
- கத்துவம்
நிறைய பேசிய போது
குறைய யோசிக்கப்படுகிறது
தனிமையின் நீட்சியை
பிறகெப்போதாவது தொடரலாம்
தவிப்பின் பிறழ்மனம்
ஆலமர நிழலுக்குள்
ஆகச் சிறந்த இலைகள்
மரணிக்கத்தான் வேண்டும்
நம்பும்படி இருக்க
நம்பாதோர் கவலைகள் பற்று
மெய்ம்மறந்த கூற்றொன்றில்
கூடு கலைத்தல் நியாயமில்லை
அவ்வப்போது வழி மாறிய
ஒற்றையடியில்
கொலுசு தொலைவது பேரழகு
நிலவுக்கு நெற்றி வியர்க்க
வரைபட கோட்டின் மத்தியில்
நெருக்கி அமரும் காதல் துளி
அன்பற்ற பொழுதை அள்ளி சுமக்கையில்
ஆற்றில் அடித்து வரும் பிணத்துக்கு
அய்யோவென்றிருக்கும்
மேற்கண்ட சகிப்புக்களில் தான்
மீண்டெழுகிறது
மீன் செத்தால் கருவாடு
தத்துவம்…!
Art Courtesy : The White Space