cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 23 கவிதைகள்

முபீன் சாதிகா கவிதைகள்


  • பூனை நிழல்

விளிம்பின் நீளல்
உருவத்தை வரைய
கண் தொய்ந்த பாதை
ஒலி அறியா தொலைவில்
இரு செவிகள் கூர்மையுடன்
மினுங்கும் விழிக்குள்
பயணித்த இருளாய்
அச்சமற்று அபயம் என
சிறு கூர் எயிறும்
பதுங்கிய உகிரும்
உள் ஒடுங்கிய குணத்தில்
இல்லில் வளர்ந்தது
இரண்டகம் கற்றது
பாலும் கனவில் ஊறி
எலியும் கவ்வும் அவாவில்
மறைந்தது நிழலில் வாலும்
மறைத்தது பொய்யில் புலியும்


  • சதுரப் பூனை

சதுரமாகிவிட்டிருந்த பூனை
வட்டத்தை விடுத்து வெளியேறி
முனைதனில் மிகுந்திருக்க
இரு நீள் செவ்வகக் கோணத்தில்
கால்களும் உயர்ந்திருக்க
தடித்த அசையா வாலும்
குரலில் குழைந்த நெளிவும்
மறைந்து கொடும் இரும்பென
கீறும் நகமும் முனையற்று
மற்றும் ஒரு விலங்கின் புதுவடிவில்
தலை கீழ் ஒலியாய் மௌனித்து
அதிரும் சில்மென் வருடலும் குலைய
கடுவனின் குணமும் அற்று
உணவின் விருப்பும் இழந்து
மிகைந்து தரித்த மறுஉயிர்
பெற்றதும் புது நாமம்


  • உரு

பூவென்று முகமாய்
மலரென்று சுகமாய்
காற்றென்று ரசமாய்
கனத்தது இதழில்

மெய்யென்று பதமாய்
நினைவென்று கணமாய்
திறமென்று புறமாய்
வளைந்தது வானில்

சாறென்று கனியாய்
விளைவென்று தனமாய்
மரமென்று விதையாய்
முளைத்தது பனியில்

வீணென்று இதமாய்
மேலென்று நயமாய்
தானென்று நீயாய்
உறைந்தது எம்மில்


  • பனித்துயர்

அடர் பனி
இடையில்
செருகிய இலை
பழுத்து உதிரும்
மரங்கொத்தியாய்
சிறு நிலவை
உள்ளிழுத்து
வெண் முத்து
உருளும் நீரென
ஒளிபுகும் படிகத்தில்
நீள வடிவாய்
திகைத்துப் பரவும்
குளிரின் மென் மௌனம்
வடிந்த கிளையினில்
துயர் என
வழியும் உருவாய்


  • குழவிக் கனா

பாதகம் அறியா
பிள்ளை நெஞ்சின்
தண்ணென்னும் விழியாய்
குழவி பரிந்து தவிக்கும்
முழவாய்ப் பெருங்குரலில்
கண்ணீரும் சொறிந்து
சிறுமென்பாதம் குழைந்து
சித்திரச் சுகமதை
மகிழ்ந்தும் அவிழ்ந்தும்
இன்பத்துத் துன்பமாய்
எதிரெதிர் இடறில்
மறக்கும் பார்வை
துதித்த பொறி என
மதிக்கும் வெளியில்
தவழும் மழலையின்
படர்ந்த பீலியாய்
துயிலும் கனா


Art Courtesy :fineartamerica.com

கவிதைகள் வாசித்த குரல்:
முபீன் சாதிகா 
Listen On Spotify :

 

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Rathnavel Natarajan

கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Mubeen Sadhika

You cannot copy content of this Website