- ஆறு கால்களோடு நடக்கும் இசை
அற்புதமான நாயன இசை அழைக்க
வாசலில் எட்டிப் பார்த்தேன்
அலங்கார பூரணியாய்
நின்றிருந்த இளம்பசு
அத்தனை வெள்ளை
வண்ண வண்ண மணிகள்
சிறு சங்குகள்
அலங்கரித்த முகப்பட்டி
கொம்புகளில் பட்டு குஞ்சலங்கள்
மாட்டின் முதுகில் மெத்துத்துணிகள்
இசையில்
பசுவினழகில் மயங்கி
கையில் கிடைத்த
பணத்தைக் கொடுத்தேன்
போதாதோ என்றெண்ணி
படி அரிசியும் கொடுத்தேன்
மாடு மகிழ்ந்து
அதன் வழியில்
அதே இசையோடு நடந்தது
வாரம் ஒருமுறை
அந்த இசையும் அழகும்
என் வீட்டு வாசலுக்கு வந்து போனது
ஒருநாளும் மாறாத ராகம்
வெண்மை மிளிரும் அந்த அழகு
என்றேனும் கொஞ்சம் மாறாதாவென
ஒவ்வொரு முறையும் யோசிப்பேன்
நான் பிறகு
நான்காவது மாடியில்
சிறு கூட்டில் குடியேறிய போது
அதே ராகம் என் காதுகளுக்கு கேட்டது
எட்டி தெருவைப் பார்க்க வழியில்லை
எந்த தெருவில்
அந்த இசை
ஆறு கால்களோடு
நடந்து போய் கொண்டிருக்கிறதோ?
- ரிஷி பத்தினியின் ஒருநாள்
மரம் சூழ்
மனமகிழ் குடில்
வாசலில் பசுங்சாணியிட்ட கோலம்
நடுவில் பூசணிப்பூ பூத்திருந்தது
வெளியே சென்ற
கௌதம மாமுனி வரும் நேரம்
ரிஷிபத்தினி அடுப்படியில் காத்திருக்கிறாள்
கரண்டியைச் சுற்றும் விரல்களோடு
மருதாணி சிவப்பும் சுழன்றாடுகிறது
“அழகு விழிகளைத் தாண்டி
புலனில் புகக் கூடாது அகல்யா”
அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது
தாளிக்கிறாள் கடுகு வெடிக்கிறது
உப்பு போட்டோமா சந்தேகம் எழுகிறது அவளுக்கு
“சுவை மொட்டுகள் நம் அடிமை
உப்பும் புளிப்பும் வேறு வேறா?”
மிகவும் நல்லவர் தான்
புன்னகைத்துக் கொண்டாள்
ரோஜா மலர்களை மாலையாக்கி வைத்திருந்தாள்
மயக்கும் வண்ணம்
மணக்கும் வாசம்
“மலர் மாயவன் தூயவனுக்கு மட்டுமே
நாம் ரசிக்கலாகுமோ?”
இன்னும் வரவில்லையே என்று வாசல் நோக்கினாள்
எங்கோ கூவும் குயிலோசை
இனிய கானமாய்
குடிலெங்கும் பரவியது
பரவசமாய் முகம் மலர்கிறாள்
“எந்த ஓசையும் அமைதிக்கு ஈடாடுமாகுமா
மனம் அலைபாயலாகாது அகல்யா”
முகம் வாடினாள்
வெறுமனே காத்திருந்தாள்
வந்தார் கௌதமர்
வழக்கத்துக்கு மாறாக
முதலில் மருதாணி கைகளை உற்றுபார்த்தார்
விரிந்த கண்ணோடு
விரல்களை பற்றி மெல்ல தடவிக் கொடுத்தார்
உணவை ரசித்து உண்டார்
ரோஜா மாலையை அவளுக்கு அணிவித்து
மாலை தவழும் மார்பினை முகர்ந்தார்
“அகல்யா விழித்துக் கொள்
இவன் நானல்ல
கல்லாய் சமைந்து போ”
அவள் தனக்குள் முணுமுணுத்தாள்
“இத்தனை நாளாய்
வேறு எப்படியிருந்தேன்?”
- பிடி அரிசி
சிறுபிராயத்தில்
சிட்டுக் குருவியாக இருந்தேன்
காட்டருவியில் கூட குதித்து மூழ்கினேன்
தாய்க்குருவி கொஞ்சம் தொலைவிலிருக்க
தடையின்றி நடமாடினேன்
பின்னர் முயலானேன்
முன்றில் மட்டும் திரிந்தாட அனுமதியிருந்தது
கொய்யாவைக் கொரிக்கும் அணில்களோடு பழக்கமிருந்தது
அவற்றிற்கும் மரக்கிளை தாண்டி வர பயமிருந்தது.
பின் வீட்டிலேயே வனம் வளர்க்கும் மானானேன்
கொம்புகளில் கனவை பிணைத்து
சிங்கத்தை தொலைக்காட்சியில் கண்டு
கற்பனையில் சின்ட்ரலாவின் கண்ணாடி செருப்பணிந்து நடனமாடிக் கொண்டிருந்தேன்
பின்னர் கழுத்தில் பிணைக்கப்பட்ட தாம்புகயிறோடு
திறந்த வாசல்படியுள்ள வீட்டில்
அலாதியான சுதந்திரத்தோடு சுற்றிசுற்றி வருகிறேன்
தாம்புக்கயிறு முளையோடு கட்டப்படவில்லை
வாசல் கதவு எப்போதுமே அடைக்கப்படுவதில்லை
ஆனாலும் தொழுவத்தைவிட்டு வெளியேற
கால்கள் ஒருபோதும் வருவதில்லை
இவ்வளவு நிம்மதியாக இருக்கும் இந்தத் தருணத்தில்
வாசல் வந்திருக்கும் உன்னை
எப்படி காதல் செய்வது
போனால் போகட்டுமென்று பிடிஅரிசியை
ஜன்னல் வழி வீசி எறிகிறேன்
அது நிர்மலமான உன் வானத்தில்
விடிவெள்ளிகளாக ஜொலித்திடும்
அதை கொண்டாடி மகிழ்ந்திரு
சுபம்
- படுக்கையறை ஜன்னல்
ஏதோ காரணத்தால்
இடிக்கப்பட்ட வீடு
முற்றிலுமாய் குவிந்து கிடந்தது
அந்த வீட்டின் பின் எல்லையைத் தீர்மானிக்கும் சுவரும்
அதிலொரு ஜன்னலும் மட்டும்
சாலையில் போகும் அனைவரையும் கவனித்தபடி நின்றிருந்தது.
முன்வாசல் திறந்து
பல சுவர்களைக் கடந்து
உரிமையோடு உள்ளே நுழைந்தவர்
மட்டுமே பார்த்த அதன் ரகசியம்
ஒரு மேடை நாடகத்தின் திரைச்சீலை போல
போவோர் வருவோர் எல்லோரும் கண்ணுறக் கிடந்தது.
குபேர மூலையில் பத்தடியளந்த
படுக்கையறை
இடிபடும் முன் அந்த ஜன்னல்
வீட்டுக்குக் கொண்டு வந்த தென்றல்
இப்போது
வாடை கொண்டல் கோடையோடு*
கலந்து குணமற்று போனது.
அது பல வருடமாய் கேட்ட
வெவ்வேறு கொலுசொலிகள்
நுகர்ந்த மல்லிகை மணங்கள்
எல்லாவற்றையும் தேடித் தவித்து நிற்கிறது
பழைய வீட்டின் இறுதி அடையாளமாய்
நிற்குமந்த ஜன்னல்.