பால்கனியில் இன்று பார்த்த நீல வானம்
நினைவு படுத்துகிறது பால்யத்தை.
தும்பைப் பூக்களில் தேன் அருந்தும்
மூடிய இமைகளுள்ள அந்த பருவத்திற்கு
வாய்த் தண்ணீருள் மூழ்கிய
கனகாம்பர விதைகள் வெடிக்கும்
துடி துடிக்கும் இதயம்.
தட்டான்கள் ரீங்கரிக்க
வண்ணத்துப்பூச்சி பிடிக்க
ஓடும் பசிய வெளியில்
பதிந்திடும் பாதச் சுவடுகள்
நூறு வண்ணத்துப் பூச்சிகள்.
பின் அயர்ந்து தூங்குகையில்
வயலெட், மஞ்சள் டிசம்பர் பூக்களைப் பற்றிய
சிறிய அவாக்களும்
வெள்ளை ரோஜா மரம் வளர்க்கும்
பெரும் வனக் கனாக்களும்.
முட்களை மறைத்தபடி
நுண்ணிய வலைத்துகளாய் விரியும்
முற்றிய வெயில் மஞ்சள் கண்ணியில்
சிக்காமல் ஒரு சிறுமி
பால்யத்தின்
சிறு வெண்சிமிழ் பூக்களை நுகர்ந்த படி
அதன் எலுமிச்சை வாசனை பரவ
பச்சை வண்ண சீப்புக் காயை
தலையில் தேய்த்தபடி
ஓடிக் கொண்டே இருக்கிறாள்
எதன் பின்னும் அல்லாமல்.
பால்ய வனம்
கவிதை வாசித்த குரல்:
மிருணா
Listen On Spotify :