-
தீயுறை துக்கம்
இப்போது
இல்லாமல் போய்விட்ட
நண்பன் ஒருவன்தான்
அப்போதெல்லாம்
எமது சிநேகிதர்கள்
குழுமிடும் குடியமர்வுகளை
சற்றும் குறைவில்லாத
சடங்காசாரத்துடன்
முன்னின்று நிகழ்த்துவான்.
குப்பியின் தலயைத் தட்டி
கோணாமல் மூடியைத் திறப்பதில்
தொடங்கி,
எந்த பானத்துடன்
எதைக் கலந்து
எவ்வளவு நீர்க்க செய்வது
என்பதிலிருந்து
தொடுகறி வகைகள்
தொந்தரவு தராத உணவென
எல்லாற்றிற்கும்
அவனிடமொரு
நிரல் வரிசை உண்டு.
பருகி முடித்த ஒவ்வொருவரும்
தத்தமது
கைக் குவளையைக்
கழுவி எடுத்து வைத்ததும்
காலி சீசாவைக் கவிழ்த்து
கடைசித் துளியால்
நாவை நனைத்து கொள்பவன்
தனது நிகழ்த்துக் கலையின்
இறுதி ஆற்றுகைக்கு
தயாராவான்
எல்லோரும் ஒரு நிமிடம்
இங்கே கவனியுங்கள் என்றவாறே
தேடியெடுத்த
தீக்குச்சியை உரசி
கண்ணாடிக் குடுவைக்குள்
இடுவான்.
ஒருகணம்
இளநீல சுவாலையொன்று
உயிர்த்தெழுந்து ஒசையுடன் அணைந்து மறைய
‘தெய்வம் குடிகொண்டிருந்த இடத்தில்
பிரிக்கமுடியாத படிக்கு
பிசாசு ஒன்றும் மறைந்திருக்கும்
அதை முறையாக
ஆற்றுப்படுத்தி
அனுப்பி வைக்கவேண்டும்’
முணுமுணுத்தவனாக
அணைந்த தீக்குச்சியை
அவன் சுண்டி எறிவதோடு
அன்றையக் காட்சி நிறையும்.
பிறகொரு
பின்மாலையில்
ஈரவிறகுகளை அடுக்கி
எண்ணெய்யூற்றி எரித்தபோது
புகைந்தெழுந்த தீப்பிழம்புகளை
திரும்பி பார்க்கக்கூடாதென தெரிந்தபோதிலும்
அம்மட்டும் அவனை
அலைகழியச்செய்து அல்லல்படுத்தி வந்த
துர் தேவதைகளின் கொதிப்பை
குளிர்விக்குமொரு சாகசத்தை
தனதிந்த ஈமத்தீயிலும்
நிகழ்த்திக் காட்டிடுவானென
நின்று சோர்ந்தேன்.
-
தெரிந்தும் தெளியாதது
அப்படி எதை
அவளிடம் கண்டாய்
இப்படி மறுகி
இன்னமும் ஏங்கி நிற்கிறாய்
இரங்கியவளாக
இவள் கேட்கிறாள்.
அக்கறையான கேள்விதான்
ஆறுதல் வார்த்தையும் கூடதான்
ஆயினும்
அவ்வளவு எளிதாக
மனதின் ஆழத்துள்
மறுகி மட்கிக்கொண்டிருக்கும் விசனத்தை
மற்றொருவரிடம் திறந்து காட்டிவிட முடிகிறதா என்ன?
ஆயுளுக்குமான அல்லல்கள் அவ்வளவையையும்
அசிரத்தையான ஒரு பதிலால்
தெள்ளென எவருக்கும்
தெளிவித்திடதான் ஆகுமா?
ஆனாலும்
கேட்கவும் சொல்லவுமாகத்தான்
எரியும் நினைவுகளை கரிந்தடங்கச்செய்கிறோம்.
வெந்து தணியாதபோதும்
மெல்லவும் விழுங்கவுமாகவே
இவ் வாழ்வை
செரித்துக் கடக்கிறோம்.
இல்லாமையின் கருந்துளை
ஒன்றுவிடாமல் உறிஞ்சிக்கொள்கிறது
சொல்வதற்கும் முந்தைய சொற்களை.
-
ஏடு தொடங்கல்
எழுதிய
எல்லாவற்றையும்
எச்சில்தொட்டு
மிச்சமில்லாமல்
அழித்த பிறகும்
அடுத்த வரியை
எழுதத் தொடங்குகையில்
கற் பலகையின்
கரித் தீற்றலில்
மறைந்து போகாது
மங்கலாகத் தென்படும்
குச்சி பலப்பத்தின்
கோடுகள் போல
நினைவுகள்
வெளிறித் தெரியும் மனதை
எதைக் கொண்டு
அழிப்பதெனத் தெரியாமல்
திகைக்கும் சிறுவனின்
முகமெனக்கு
பாதகமொன்றுமில்லை
துடைத்தழித்து
எழுத எழுதத்தான்
துலங்கி வரும்
உன் எழுத்தென்று
தலைவருடிச் சொல்லும்
அரிச்சுவடி வகுப்பு
ஆசிரியையின்
ஆதூரம் நீ தந்தது.
Courtesy : Artist Ontario, Canada.
சிறப்பு.. தீயுறை துக்கம் வெகு சிறப்பு