cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

ராணி கணேஷ் கவிதைகள்


1.

மிச்சமிருக்கும் நாட்களை
வாழவேண்டிய கட்டாயத்தில் இருப்பவனுக்கு
வசந்தத்தை பற்றிய வகுப்பில் அக்கறையிருப்பதில்லை..

கழிவிரக்கம் பெருகிய இரவில்
தற்கொலை பாவச்செயலா என்று சிந்தித்து உறங்கிப்போனவனுக்கு
விழித்தலைக் குறித்த கவலையொன்றுமில்லை..

அடுத்தவேளை சோற்றின் உத்திரவாதம் அற்ற
பரதேசியின் தட்டில் விழும் உணவு எதுவாயினும்
குறை சொல்லப்போவதில்லை..

உதடுகள் பிரிந்து உரையாட நாதியற்றவனுக்கு
எங்கிருந்தோ ஒலிக்கும் திரைப்பாடல்
பிடிக்காதபோதும் செவிமடுக்காமலில்லை..

வாழ்வின் மீதுள்ள அனைத்து சலிப்புகளையும்
சல்லடையில் இட்டு களைகிறான்
மிச்ச வாழ்க்கையை வாழும் கட்டாயத்தில்…

வாழ்தல் இயல்பு…
வாழ்தல் வரம்…
வாழ்தல் இனிது…
வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே!


2.

மழை ரசித்த மாலையில்
மலர்கள் தொடுத்துக்கொண்டே
சிறுதாழ்வாரத்தின் வழியே
காணும் மழைத்துளிகளில்
குளிர்ந்து கரைந்து ஓடும் மனம்
சென்று சேருவதென்னவோ
உன் நினைவுகளில் தான்…
பூவாசமோ, மண்வாசமோ, மழையோசையின்
ஞாபகத்தில் கமழும் உன் வாசமோ அறியேன்..
கூடடையும் பறவையென எங்கு சுற்றினாலும்
உனை அடையும் நினைவுப்பறவையை
எந்த கூண்டில் இட்டு அடைப்பது?!


3.

உச்சக்கட்ட அவசரக் கோபத்தில்
உமிழ்ந்த வார்தைகள் அத்தனையையும்
அலைபேசியிலிருந்து வெகுசுலபமாய்
அழித்து விடுகிறாய்…

காணாமல் போனச் சொற்கள்
மனதிலிருந்து என்றாவது மறையக்கூடும்..
என்றாவது என்ன பேசினோம் என
எடுத்து வாசிக்கையில்
சந்தோஷமான தருணங்கள் என்னை தாலாட்டக்கூடும்..

பிணக்கு தீர்ந்த்து நாம் மீண்டும் பேசக்கூடும்..
முடிந்து விட்டதாய் நினைக்கும் நட்பு துளிர்க்கக் கூடும்
அப்படி எதுவும் நடக்காவிட்டாலும்
நீ என் நன்னூல் பக்கங்களிலாவது
இருந்துவிட்டு போவாய் தானே..!


4.

நீ பற்ற வைத்த சிறுபொறிதான்
உன்னைச் சுற்றி பெருந்தீயென
பரந்து எரிகிறது..
விதைத்ததை அறுக்கத்தானே வேண்டும்!
வேறு என்ன செய்யமுடியும்
வளர்ந்த பயிரை?!
மேய்ச்சல் நிலத்தை விட்டு
மேடுகளில் அலையும் மாட்டினைப் போல
கான் பொருள் விடுத்து நீ உருவாக்கும் புலம்பலின் வெப்பம்
மந்தமான மத்திய வெயில் போல
சோம்பி திரிந்து வெக்கை மேலெழ
தன்னறியா உறக்கத்தில் ஆழ்த்தி
அப்பொழுதை மழுங்கடித்துக் கொண்டிருந்தது.
அதோ தூரத்து மேட்டில் மாடுகள் மேய்ந்தவண்ணம்..
நிமித்தப்பறவைகள் எரியும் தன் வாழ்மரத்தினை சுற்றிப் பறக்கின்றன..
நோக்குதலன்றி என்ன செய்துவிட முடியும்?
இப்படித்தான் சுற்றிக் கொண்டே இருக்கிறது இந்தக் காலச்சக்கரம்…


கவிதைகள் வாசித்த குரல்:
  ராணி கணேஷ்
Listen On Spotify :

About the author

ராணி கணேஷ்

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ராணி கணேஷ், கணிப்பொறி அறிவியல் படித்து தற்சமயம் பப்புவா நியு கினியா தேசத்தில் சொந்த தொழிலை நிர்வகித்து அங்கேயே வசிக்கிறார்.பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். பள்ளிக்காலம் தொட்டே கவிதைகள், கட்டுரைகள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். இணையத்தில் கவிதை, திரைவிமர்சனம் என எழுதி வருபவர். சமூக சேவையில் விருப்பம் உடையவர்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Mahalakshmi

இயல்பாய் இயம்பினவான மொழியாடல்… சுவர் சித்திரம் போலொரு அழகில்!
அருமை தோழி

You cannot copy content of this Website