-
புல்டோசர்
புல்டோசர்கள் வீடுகளை தரைமட்டம்
ஆக்குகின்றன.
புல்டோசர்கள் நம்பிக்கையின் மேல்
ஊர்நது சென்று நசுக்குகின்றன.
புல்டோசர்கள் கனவின் முதல் மலரை
கொய்து மறைந்தோடுகின்றன
புல்டோசர்கள் புணர மறுத்து முகம்
திருப்பும் கலையை கற்றிருக்கின்றன.
புல்டோசர்கள் யாருமற்ற சாலையோரம்
நின்றபடி சன்னமான குரலில் தனித்தழுவுகின்றன.
புல்டோசர்கள் காரணமின்றி சிரித்து விழியோரம்
துளிர்க்கும் துளியை சுண்டிவிடுகின்றன.
புல்டோசர்களால் ஆனது இவ்வுலகு
உன் பெயர்களின் மிகப்பிடித்தமானதொரு
பெயரை புல்டோசர் என்கிறேன்.
புல்டோசரை கடைசியாக ஒரு முறை
இறுக அணைத்துப் பிரிந்தோடு
என்கிறாய்.
புல்டோசர்கள் தரைமட்டம்
ஆகுகின்றன.
-
நீல நிற கண்களுடன் அமர்ந்திருக்கும் பாறை
பாறையொன்றின் மீதமர்ந்து
சிந்தித்துக் கொண்டிருக்கிறது
கடைசி பிளிறு.
அதன் வழித்தடம் அழித்து
சாலைகள் அமைத்தவன்
சிலை போல் அருகில் நிற்கிறான்.
தன் கண்களை மெதுவாகத் திறந்தது
பாறை.
அருகில் நிற்பவனின் மேல் காறி உமிழ்ந்துவிட்டு
மீண்டும் கண்களை மூடிக்கொண்டது.
தடமற்ற வழியே
பிளிறியபடி குதியாட்டம் போட்டு வருகின்றன
கான்க்ரீட் கட்டிடங்கள்.
-
கடல் என்பது
மச்சங்கள் பாடுவதை கேட்டிருக்கிறாயா
அவை தனித்தனியாகவும்
மொத்தமாகவும் சேர்ந்து பாடுவதை
நான் கேட்டிருக்கிறேன்
அந்தப் பாடல்கள் அனைத்திலும்
வானமும்
மின்னும் நட்சத்திரங்களும்
மங்கிய நிலவும் தவறாமல் இடம்பெற்றிருக்கும்
ரகசியத்தை உனக்குச் சொல்லவா?
ஏன் எந்தவொரு பாடலிலும்
கடலும் அலையும் ஆமைகளும்
நண்டுகளும் இல்லை என்பதறிவாயா?
பன்னெடுங்காலமாய் மச்சங்களின் விறைத்த
பார்வையின் காரணம் யோசித்திருக்கிறாயா?
இல்லை.
அவை பாடுவதையே நான் கேட்டிராதபோது
அந்தப் பாடல்களின் அர்த்தம்
எனக்கெப்படித் தெரியும்?
நீயே அதன் காரணத்தையும் சொல்லிவிடு.
சரி
ஒரே வரியில் சொல்கிறேன் கேள்.
கடல் என்பது மிகப்பெரும் சிறை.