இதழ் பிரித்து
நீ சொல்ல முயலும்
ஒவ்வொரு பிழையான
உச்சரிப்பிற்கும் பின்னே
ஒளிந்திருக்கும் வார்த்தைகள்தான்
எனது இதுநாள் வரையிலான உலகம்.
உறங்கும் எனது கண்ணிமைகளை
மென்மையாகத்
தொட்டுத் திறந்து
நீ உளறிவிட்டு ஓடும்
இடைவெளியில்தான்
நான் முழுமையாக
வளர்ந்தேன்.
உனதறையில்
நீ சேமித்து வைத்திருக்கும்
நீலவண்ணச் சொற்கள் அடங்கிய
ஆல்பம்தான்
எனது உயிர்த்தடாகம்.
நீ தெளிவாகப் பேச
இன்னும் பல வருடங்கள்
ஆகும் என்கிறார்கள்
வருத்தம் தொய்ந்த முகத்துடன்.
எனக்கென்னவோ
புரியாத உன் அடுக்கற்ற
சீரற்ற மொழியில்தான்
நான் என்னென்னவோ
புரிந்து கொள்ளத் துவங்கினேன்.
நீ நீயாக
வளர்ந்து வா.
எனக்கொன்றும் அவசரமில்லை.