(1) அப்போதும்
உன் மார்பில் ஊர்ந்து ஏறும்
என் முழங்கைகள்
எவ்வளவு வழவழப்பானவை
என்பது
உனக்கு நன்றாகவே தெரியும்.
கண்களுக்குள்
கொழுத்த தின்பண்டமாய்
திரண்டு மிதக்கும்
குற்றவுணர்வின் கசகசப்பில்
நீ கவனமாய் எண்ணி
நீட்டும் பணத்தாள்கள்கூட
எனது முழங்கைகளைப் போலவே
வழுக்கிக் கொண்டு போகின்றன
எங்கேயோ
இந்த எண்ணெய்க் கசகசப்பில்
நீயும் நானும் காதலர்களாகவும்
இருந்திருக்கக் கூடும்.
தொடைகள் கனக்க
ஒரு திருமண வாழ்க்கை.
இந்தக் குறுகலான அறைக்குள்
கரப்பான்பூச்சிகளின்
சரசரப்பைப் போலவே
அப்போதும்
உனக்கும் எனக்குமான
சண்டையும் காமமும் கலந்த
சிறு உரையாடல்கள்.
அப்போதும்
நீ ஏதேனும் பாட்டுப் பாடுவாய்.
அதை ரசிப்பதைப் போலவே
தட்டித் திருப்பிப்போட
இந்த இடத்துக்கே
தொடர்பில்லாதவனைப்போல்
நீ கிளம்பிப் போவது
தெரிகிறது.
அப்போதும்
நீ இப்படித்தான்
அவ்வபோது ஏதேனும்
பணம் நீட்டியிருப்பாய்
அல்லவா?
***
(2) நீல அல்லி இரவுகள்
இப்படித்தான்
நிகழ்ந்துவிடுகின்றன
சில இரவு நேரங்கள்.
அடிவயிற்றில்
காற்றை நிரப்பிக் கொண்ட
ஒரு பட்டத்தின்
திடீர் குதியலோடு.
புல்தரையில் நகரும்
விஷமுள்ள பாம்பின்
சுடர்விட்டு மறையும்
திடீர் வெளிச்சத்தோடு.
நாற்பது வயதுக்கு மேல்
காதலிகளை
ஆகாயத்தின்
நீல நிறமாய்த்தான்
பார்க்க முடிகிறது.
விரல்களின் இடுக்கில்
சூடாய்ப் பரபரக்கும்
பட்டத்தின் நூலை
பிடித்தும் இழுத்தும்
விடுவிப்பதையும் போல
ஆடைகள் அவிழ்ப்பதில்
அத்தனை நிதானம்
தேவையில்லைதான்.
மிகச் சரியாய்
போட்டுவைத்த
ஒரு கணக்குப் புதிரை
விடுவிப்பதுபோல
நமக்குச் சொந்தமில்லாத
ஒரு கனமான சங்கிலியை
கழுத்தில் மாட்டிப் பார்ப்பதைப்போல
நகங்களிலிருந்து
சாயத்தைச் சுத்தம் செய்யும்
நிதானமாய் நிகழ்கின்றன
இந்த நீல அல்லி இரவுகள்
***
(3) வீக்கம்
உறவுப் பிறழ்ச்சி என்பது
தசைப்பிடிப்பைப் போலவே
வலி நிறைந்தது.
யார் கண்ணுக்கும்
தெரிவதில்லை.
கைளை உயரத் தூக்கி
இங்கும் அங்கும் அசைத்து
உடற்பயிற்சி செய்யும்
முதியவனுக்குப் போலவே
அவனுக்கு லேசாய் மூச்சு வாங்குகிறது.
அவளுக்கும்.
உடற்பயிற்சியாகத்தான்
செய்கிறார்கள்,
எதையும்.
அதற்கு ஒரு பூங்கா
மொத்தமும் தேவைப்படுகிறது.
***
(4) சுயமுள்ள நிலவு
ஒரு சுய அவதானிப்புள்ள
நிலவு
வேறென்ன செய்யும் –
உன்மீதும் என்மீதும்
வெளிச்சத்தை
வாரி இறைத்துவிட்டு
இருட்டுக்குள் தன்னையே
வியப்போடு பார்த்துக்
கொண்டிருப்பதை தவிர?
நீயும்
பாதிக் கண்கள் கிறங்க
அப்படித்தான் கிடக்கிறாய்
என்மீது குளிர்ந்த கரங்களை
மெல்ல சாய்த்தபடி
வேலைக்குப் போய்வந்த
களைப்பில்
இதுவும்கூட நானா என்று
முழுவதுமாய்
உன்னையே பார்த்து
வியந்து கொண்டு.