cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

இரண்டு கவிதைகள் – ரவி அல்லது


காரணங்களை கடந்து.

தொடர்பு எல்லைக்கு

அப்பால் சென்ற

நாட்களில்

என்னைப் பற்றிய

சிந்தனை

ஏதாகிலும்

இருந்ததாவென

அறியேன்

விசாரிப்புகளின்

சுவடுகளற்றிருப்பதால். 

யாவும்

மறந்ததொரு 

வானம் 

பார்க்கும் பொழுதில்

வந்தமர்ந்துவிடுகிறாய்

விட்டகல முடியாத வியப்பில்

காத்திரமானதெனக் காட்டி. 

சிறு சலனத்தையும்

உனக்குள்

நிகழ்த்திடாதவென்

இருப்பின்

அசௌகரியத்தை

சொன்னபொழுது

இடது காலை

காட்டினாய். 

மருந்திடாத

என் கால்ப்புண்ணின்

மறுபதிப்பாக

மாறி

இருப்பதை.


மாபாதகனை தேடும் மனம்.

கொட்டிய 

பூ மலையாகத்தான்

இருந்தது

பேசிய முடித்த பிறகும்

வாசனைகள் வீசும்

அவரின் சொற்களை

ஒவ்வொன்றாக

பார்க்கும்பொழுது. 

சற்றேறக்குறைய

என் நிகழ்வொத்த

அன்றைய நாளினை

அவர் மகிழ்வுடன்

சொன்னார். 

என் துயரப்பாடுகளில்

துன்பம் துய்ப்பதாக 

சொன்ன பொழுதும். 

ரணப் பிரளயமென

உழன்ற நேற்றின்

முடிச்சுகளை

ஒப்பீடுகளற்று

அவிழ்த்துப் பார்க்கின்றேன்

அநேக அற்புதங்களை

காணாத பொழுதும்

நிகழ்ந்தேறி இருப்பதை

வெயில் சூழ்ந்த

வேளையிலும்

அதிகாலை புத்துணர்வை

அணுக்கமாக்கிய

அவரைத் தேடுகிறது

மனம்

அனுதினமும். 

சாத்தியமாகிய

இத்தருணத்தினைப்போல

சாத்தியமாகும்

நாளையுமென

பிரயாணத்தில்

பிதற்றிப்போன

மாபாதகனை

எங்கு தேடுவேன்

இம் மனிதக் கூட்டத்தில்.


கவிதைகள் வாசித்த குரல்:
  கபிலன்
Listen On Spotify :

 

About the author

Avatar

ரவி அல்லது

பட்டுக்கோட்டையைச் சார்ந்த ரவிச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ ஆகிய கல்வி பட்டங்கள் பெற்றவர். கம்ப்யூட்டர், கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருபவர். ரவி அல்லது எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website