Share :
Nutpam -Podcast
Nutpam -Podcast
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
Loading
/

  • வேறெங்கோ..

குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தபோது
நீ கிடைத்தாய்
மட்கி போயிருந்தாய்

விரல் நுனி பட்டாலே நொறுங்கிவிடும்
உன் பெயர் மீது
தெருப்பொறுக்கி நாயொன்று
மூத்திரம் பெய்திருந்த தடம் இருக்கிறது

உனது கனவுகளை நீ அடைந்தாயா
என்பது தெரியவில்லை

அத்தனை ப்ரியத்துடன்
யாருக்கோ நீ
அன்பளித்த பரிசு போலத்தான் இருக்கிறது

ஏனோ
இருவருமே குப்பைத்தொட்டிக்கு
அனுப்பிவைக்கப்பட்டீர்கள்

இப்போது
உறவார்ந்த மதிப்புகளின் அளவுகோலை கைப்பற்றும்
மந்திரக்கோல்
என்னிடமுள்ளது


  • வரத்து

நான் அற்று
நானற்று
தயவுகளை நாடாமல்
போக்குகளோடு களி கூடி

வலிந்து கை குலுக்கி வாய் கோணாமல்
எதிரே உள்ள முகத்தைப் பார்த்து வம்பாய்
ஒரு சிரிப்பைத்
துப்பாமல்

தலைக்குள் அனாவசியமாய்
பெருங்கூட்டமொன்றை
ஏற்றிக்கொண்டு
தள்ளாடாமல்

வீடு வந்து சேர்வது என்பது
பெரும்போக்கு


  • நேற்றிலிருந்தே காத்திருக்க பணிக்கப்பட்டிருந்தேனா

இந்த வரவின் முகாந்திரம்
அறியப்பட்டவைகளுக்கு அப்பாலுள்ள கனவுகளை
மாய்ந்து போகவே சபிக்கின்றன

முணுமுணுப்பில் உச்சரிக்க முடியாத மந்திரச் சொற்களால்
நான் நீங்கிட
நித்தம் பேணுகிற ரகசியங்களுக்கு காவலிருப்பாயே
மனமே

உனது குரல்வளையில்
கட்டைவிரலால் அழுத்தி பிதுக்கும் ஆதாமின் ஆப்பிளை
முளைத்த நிலத்திலேயே
புதைத்திடவும் கட்டளையிடுகிறேன்

இணங்கு


  • எனது தனிமையை இல்லாமலாக்குகிறாய்

உன்னுடைய கருஞ்சாம்பல் நிற உடலின் வரிகளை
உற்றுப் பார்க்கிறேன்

உனது செல்களில் சுருக்கி எழுதப்பட்டிருக்கும்
டி.என்.ஏ தகவல்களின்
தவிர்க்கப்பட்ட பரம்பரை நினைவுகளில்
என்னுடைய மூத்த குடி
நிச்சயமாய்
இல்லை

நீயென் சமையலறை சுவர் கூரையின் உயரத்தில்
இருந்தபடி என்ன யோசிக்கிறாய்

உன்னுடைய தங்க நிற விழிக்கோடுகளின்
செங்குத்தான சிறு உயரத்தைக் கொண்டு
நித்தம்
எதை அளக்கிறாய்

பிரம்மாண்டமான உயிர்த் தோற்றத்தோடு
இப்புவியை ஆட்சி புரிந்ததாக
உன் மூதாதையரின் கதைகளை அனுமானித்தபடி
அவர்களை கொன்றொழிக்கும் சம்பவங்களை
கிராஃபிக்ஸ் சினிமாக்களாக உற்பத்தி செய்து
மல்டிஃப்ளெக்ஸ் திரையரங்குகளில் பணம் வசூலித்தபடி
அதற்கான பார்ட் –டூ சந்தர்ப்பத்தை கனவு கண்டபடி
தொழில்நுட்ப சந்தைப் பெருக்கத்தோடு
காத்திருக்கிறோம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
உயிர்மாற்று சுழற்சியின் பொருட்டு
உன் இனத்தை அழித்ததைப் போன்ற விண் கல்லொன்று
எம்மீது பாய
மீச்சிறு அறிவியல் தகவல்களோடு

காத்திருக்கிறோம்

புக்கோவ்ஸ்கி சொல்லுகிறான்
நவீனக் கவிதையென்பது உயரமான மதில் சுவரில்
வீற்றிருக்கும் பல்லியை போன்றது
அது கீழிறங்கி வரும்வரை காத்திருக்க வேண்டும்

சொல்
நீயேன் காத்திருக்கிறாய்


கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா

Listen On Spotify :

Author :

கவிதைக்காரன் இளங்கோ
கவிதைக்காரன் இளங்கோ
கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments