- குருதிப்பூ
ஆறு இதழ்கள் கொண்ட செங்காந்தளைப்
பெண்ணின் கையில் இருக்கும்
ஐந்து விரல்களோடு
எப்படி ஒப்பிட முடியும்?
அடியில் நீலத்தையும்
மேலே மஞ்சளையும்
உரித்தாக்கிக் கொண்ட
எரியும் நெருப்போடு
அடியில் மஞ்சளாகவும்
மேலே சிவப்பாகவும் இருக்கும்
செங்காந்தளை ஒப்பிடுவது
எவ்வாறு பொருந்தும்?
ஒரு செங்காந்தள் பூவை
கையுறையாக
குறிஞ்சியில் வாழும் தலைவிக்கு
கொண்டு செல்கிறான் தலைவன்
காதலைப் பொருத்தவரை
மலர் கேட்டால்
வனத்தையே கொடுக்க வேண்டும்
செங்காந்தள் மலர்வனமான
குறிஞ்சியில் வாழ்பவளுக்கு
ஒரே ஒரு செங்காந்தளைக்
கையுறையாக கொண்டு செல்வது
எப்படிப் பொருந்தும்?
குறுந்தொகையின் முதல் பாடலில்
அந்தக் குறிஞ்சி வாழ் தலைவி
செங்காந்தளைக்
குருதிப்பூ என்கிறாள்
மஞ்சளான எலும்பு மச்சைதான்
சிவப்பு குருதிக்கு நதிமூலம்
கையுறையை மறுத்தாலும்
குறிஞ்சி தான்
காதலுக்கு ரிஷிமூலம்.
- முல்லை
இமில் வாழ்நர் சிற்றூரில்
வாழும் குமரனுக்கு
காளையின் திமில் எல்லாம்
திமிலே அல்ல
அவன் அன்றாடம் அன்புறத் தழுவும்
குமரியின் தனம்
காளையின் உடம்பில் இருக்கும்
வெண்ணிறப் புள்ளிகள் எல்லாம்
குமரி மத்தால் தயிர் கடையும் போது
அவள் தோளில் தெறிக்கும்
தயிரின் புள்ளிகள்
கொல்லேற்றின் கொம்பைக் கூட
கொலை தொழில் புரியும் ஈசன்
தன் தலையில் சூடும்
பிறை என்கிறார்கள்
குமரனுக்கு அதுவும் பிறை அல்ல
குங்குமத் திலகமிடும்
பிறை போன்ற குமரியின் நுதல்.
- அன்பின் ஐந்திணை
குறிஞ்சித்தேன் வெல்லும்
சொல் உனது
முல்லை முகை வெல்லும்
பல் உனது
மருத வயல் வெல்லும்
வளம் உனது
நெய்தல் கடல் கொண்ட
நிலம் உனது
பாலையின்
மணலும் அனலும் போல
மாலையின்
மலரும் மணமுமாய்
நாம் சேர்ந்திருப்போம்.
- மஞ்ஞை
மயில்கள்
அகவல் ஓசை கொண்ட
ஆசிரியப் பாக்கள்
மழைக்கு ஆடும் தோகைகளுக்கு
மழைக் கடவுள் வருணனைப் போல்
உடல் முழுவதும் பீலிக்கண்கள்
காட்டுத் தீ போல் பூக்கும்
வேங்கை மரத்தில் காணலாம்
பேகன் கலிங்கம் நல்கிய
கான மஞ்ஞையை
ஆண் மயில் தோகை
பெண்ணின் கூந்தல்
பால் மாறி பிறந்து விட்ட உவமை
மயிலின் நீலக் கழுத்து
வான் நீலமா?
கடல் நீலமா?
இல்லை
குறிஞ்சிப்பூ நீலமா?
மயில்களின் முட்டை
முசுவின்
குருளைகளுக்கு
உருட்டி விளையாடும் பந்து
இது நொச்சி இலை போன்ற
மயிலின் அடியொற்றி எழுதிய காவடிச்சிந்து.