cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

மூன்று கவிதைகள் : கண்ணன்

கண்ணன்
Written by கண்ணன்

  • வீட்டின் பின்புறம் ஒரு சிறுவனமிருந்தது

வளர்ப்புக்கு பன்னிரண்டு ஆண்டுகள்
அறுத்து அடுக்க இரண்டே மணிநேரம்
வெண்ணெய்யில் கத்தியாக சிறு ஒலியுடன்
இயந்திரம் இயங்க
கோதுமை மாவாக மரத்தூள்
மரங்களின் ஓலம் காதையடைக்க
கண்ணீருடன் கதறியபடி
வலசை போகும் பறவைகள்
விறகுக்கு மட்டுமே இனியுதவும்
காய்க்காத மரம்
வீட்டுக்காகாது
பொருள்வயின் பிரியும்
கணவனுக்கு கையசைக்கும் மனைவியாய்
கையாலாகாமல் நின்றிருந்தேன்


  • தேய்மானம்

பழைய சாமான்
பித்தளை, அலுமினியம், எவர்சில்வர்
வாட்டர் ஹீட்டர்
அடுக்கிய படியே சென்றது வண்டி
‘ஐம்பது ஆண்டுகள் பழய
உடலொன்று உள்ளது ஏதேனும் கிடைக்குமா?’
‘துண்டுத்தகரமும் கிடைக்காது’ எனச்சொல்லி
நில்லாது சென்று விட்டார்


  • நளனும் புளிக்குழம்பும்

கடைசிப் பந்தியில் பரிமாறும்போது
அடிப்பிடித்த பாத்திரமாயொருவர் அமர்ந்திருக்க
அருகிலிருந்தவர் சொன்னார்:
‘இவர்தான் சமையல் மாஸ்டர் ‘
புளிக்குழம்பு ஊற்றிவிட்டு
காலில் விழுந்துவணங்க
கூச்சமாயிருந்ததால்
கைகளிரண்டையும் பற்றிக்கொண்டு
கண்களில் ஒற்றிக்கொண்டேன்
மனசுக்குள்


கவிதைகள் வாசித்த குரல்:
  கண்ணன்
Listen On Spotify :

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website