-
நிம்மதி
பேசித் தீர்க்க வேண்டியதைப்
பேசாமலே
தீர்த்துக்கொண்ட பின்னர்…
பேசியிருக்கலாமோ என்று
அவரவர்க்குள்ளேயே
பேசிக்கொண்டிருக்கிறோம்
இருவருமே.
தீர்த்துக் கொண்ட பின் தான்
தெரிகிறது…
உள்ளத்தைப் பூட்டிக்கொண்டு
உதடுகளை மட்டும் தான் திறந்திருக்கிறோம்
நாமென்று.
சொற்கள் தேவைப்படுகையில்
மெளனத்தையும்
மெளனம் தேவைப்படுகையில் சொற்களையும்
அள்ளித் தெளித்திருக்கிறோம்
அசடுகளைப் போல.
உண்மையில்..
நிலத்தே பதுங்கிக் கிடக்கும் வேரென
நமக்குள் உள்ளொளிந்திருக்கும்
நிஜத்தோடு முட்டிமோதித் தெளிந்திருக்கிறோம்
வேறு வேறென.
நிம்மதிதான் விடு.
-
பிடித்தம்
ஒரு விடுமுறைக்கு
குடும்பமே கூடியிருந்ததில்
நிறைந்திருந்தாள் அம்மா.
ஒவ்வொருவருக்கும் பிடித்தமானதாய்த்
தேடித்தேடிச் சமைத்துத் தருவதில்
அலாதிப் பிரியங்கொண்ட அம்மாவிடம்
தாத்தாவுக்கு என்ன பிடிக்கும்
என்றொரு கேள்வியில்
இறந்த காலத்தைத்
திறந்து வைக்கிறார்கள்
குழந்தைகள்.
தாத்தாவுக்கு என்ன பிடிக்காதுயென கேளுங்கள் என்றவாறு புளிக்குழம்புக் கதையை
அவிழ்த்துக் கொட்டுகிறான்
அண்ணன்.
அப்பாவுக்குப் புளிக்குழம்பு
அறவே பிடிக்காது
என்றோ ஒரு நாள்
பருப்புத் தட்டுப்படாது
புளிக்குழம்பு வைத்துவிட்டாள்
அம்மா.
தயங்கித் தயங்கி நீண்ட
குழம்புக் கரண்டியை
ம்ம் என்று ஒரு பலத்த உறுமலோடு
நிறுத்திவிட்டு
தயிர்க்கிண்ணத்தை
சோற்றில் கவிழ்த்துக் கொண்ட வேகத்திற்கு..
அது சிதறித் தெறித்து
தயிராபிசேகத்தோடு
வெலவெலத்து நின்ற அம்மா
இன்னமும் கண்ணுக்குள்
நிற்பதாகச் சொல்லி..
அதன்பிறகு புளிக்குழம்பே
பார்த்ததில்லை வீடு என்று
அவன் முடிக்க..
புரையேறிச் சிரிக்கிறது
உணவுவேளை.
இப்போது கேள்வி
அம்மாவுக்குத் திரும்புகிறது..
உனக்கு என்ன பாட்டி
பிடிக்கும் என்று.
இதுவரைக்கும் நாங்கள் யாரும் யோசிக்காத கேள்வி
ஒரு கனத்த மெளனத்தை அங்கே
இறக்கி வைக்க..
மெல்ல முணங்குகிறாள் அம்மா…
புளிக்குழம்பு என்று.
-
குட்டிபோடும் அன்பு
இதயக்குறியிட்ட விரலிடை
தெரிகிற அந்த
சின்னஞ்சிறு மேகத்தை
அத்தனைப் பிடித்துப் போகிறது எனக்கு.
இதயத்துக்குக்குள்
இணைந்து கொள்வதெதுவும்
பிடித்தத்திற்குள்
பிணைந்து கொள்வது.
பிடித்தமாகிப் போனதிடம்
பிரியத்தைச் சொல்லாமல்
அதைச் சுண்டவைத்து
என்ன செய்ய.
சர்க்கரையாயொரு முத்தத்தைச்
சத்தமின்றி
பறக்கவிட்டு வந்தேன்.
அது குட்டிபோட்டு குட்டிபோட்டு
பிறிதொரு நாள் எனை
பூந்தூறெலென
நனைக்கக் காத்திருக்கும்
பாருங்களேன்.