1. பிரிதல் ஒப்பந்தம்
நாமிருவரும்
பேசாமல் இருப்பதற்கு
தொடர்பற்றுத் தொலைவதற்கு
ப்ரியங்கள் இழப்பதற்கான
வாய்ப்புக்களுக்கு குறைவில்லை.
ஆயினும்
எதோ ஒரு கணத்தில்
உன் விம்பம் அவாவும் நினைவுகளில் கவிதையாய் வந்து விழுகிறது
ஒரு சொல்
ஒன்றில் கோபமாக
இல்லையேல் மௌனமாக
2.சான்டாவின் வருகை
பனிப்பந்துகள் கொட்டிக்கிடக்கும்
நீண்ட வீதியில்
மான் கன்றுகள் பூட்டிய தேரில்
மார்கழி இருள் கிழித்து
மணியோசைகள் கினுங்கிட
ஒவ்வொரு நள்ளிரவிலும்
பாட்டியின் கதைகளில்
சான்டா வருகிறார்
பழைய காலுறைகளுக்குள்
தன் கனவுகளையெல்லாம்
காகிதங்களில் எழுதிவைத்து
பிய்ந்து கிடக்கும் கூரையின் வழியே இரவு முழுவதும்
கண்விழித்து சான்டாவுக்காக
இருள் பருகுகின்றான்
பேரக்குழந்தை.
மேசையில் கிடந்துருகும்
மெழுகுதிரி வெளிச்சத்தில்
நடுநிசி கடந்தும்
ஒய்வின்றி
தையல் மிஷினை மிதிக்கும்
பெருந்தாயின் நிழலில்
எந்த சலனமும் இல்லாமல்
வர்ணமாய் விரிகிறது
சான்டாவின் புன்னகை.
3.வனம் தவறிய பறவை.
கண்முன் வீழ்ந்து கிடக்கிறது
பறவைக் குஞ்சொன்று..
வளர்க்கலாம் என்கிறாள் தங்கை,
விடு ” அதன் தாய் பார்த்துக்கொள்ளும்
என்கிறாள் அம்மை,
வேட்டை நாய்கள் கவனமென்கிறான் பக்கத்து வீட்டுக்காரன்.
கூட்டிலிருந்து
பிரிந்த பறவையின் பார்வையில்,
மிரண்ட சிறகசைப்பில்
எனக்கு மட்டும் ஏனோ
குழந்தைகள் காப்பகத்திலிருக்கும் தம்பியின் சாயல்