-
சிறு மழை
காற்றில் இறங்கி விட்ட
இலை
கூட சில பூக்கள்
கால் உடைந்தும்
காலத்தில் நிற்கும்
அசையா குதிரை
வயிறு நிறைந்த
வழிப்போக்கன்
சென்ற வழி
திறந்து கொண்ட பிறகு
ஆசுவாசப்படும்
வெறுங்கதவு
வீதி திருப்பத்தில்
தானாக முளைத்திருக்கும்
புத்த சிலை
இதோ வந்து விட்டது
சின்னஞ்சிறு வயதில்
சித்திரத்தில் கொட்டிய
சிறு மழை
-
தனித்திருத்தல் பலம்
தனித்த பூனைக்கு
சிரிப்பெல்லாம்
கிடைத்த கிச்சன் வாசல்
வாசம் தான்
நகர்வலம்
நந்தவனம் என்று
ஒற்றைக் காக்கை
உருப்பட வழி தேடுகிறது
தனித்து விடப்பட்ட
ஒற்றை யானை
முட்டி மோதி
காடடைந்து விடுகிறது
தனித்த எறும்பும்
கிடைத்த வழி பிடித்து
மூச்சிரைக்க உணவு துகள்
தூக்கி போகிறது
தனியே தன்னந்தனியே
வந்து போகும் நிலவுக்கு
தன்னளவு
தன்னிறைவு
தனிமைக்குள் தவழும்
மனுஷப்பயல் மட்டும் தான்
being alone என
ஸ்டேட்டஸ் வைத்து
அலைபேசி பார்த்து
அங்கேயே கிடக்கிறான்
-
கல் மனிதன் கரைந்தான்
என்னைக்குமே இப்படி
நடந்ததில்லை
மஞ்சள் சிவப்பு பச்சை
ஆரஞ்சு வெள்ளை என
வறுமைக்கு தான்
எத்தனை நிறங்கள்
கையில் பிடித்திருந்த
கொத்து கயிறுகளும்
அறுந்த நரம்பென துடித்தன
பலூன்கள் கனக்கும் என்று
இன்று தான் தெரிகிறது
அமர்ந்திருந்த கல்லுக்கிடையே
உலகம் அழுந்த போட்ட
வறுமைக்கோடு
யோசனை இனி உதவாது
அடிக்கின்ற காற்றையாவது
அணைக்கட்டும்
பிடியை அப்படியே விட்டான்
பறக்கும் வண்ணங்களாக
கொத்து பலூன்களும்
விட்டு விடுதலை ஆனது
கத்தும் வயிறுக்கு
காற்று தான் உணவா
தோள் தொட்ட வெள்ளை கைகள்
ஒரு கையில் கொத்து பலூன்
கயிறு பிடித்து
மறுகையில்
வயிறோரம் பற்றியிருந்த
கல் மனிதனின் ஓவியம் நீட்டியது
அதிசயிக்கும் முன்னே
அப்படியே ஐநூறையும் நீட்டியது