cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 29 கவிதைகள்

மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்


1. கபாடபுரம்

பயணம் முடித்து வீடு திரும்பும் போது
வீட்டுக் கதவு பூட்டி இருப்பதை
ஏற்றுக்கொள்ளாத மனது
‘அம்மா’ என்றழைத்தபடி
கதவைத் தட்டிப் பார்க்கிறது
அழைப்பு மணியை
அழுத்தி அழுத்தி ஓய்கிறது

சாவி துவாரத்தில் கண்வைத்து
உள்ளிருக்கும் வெளியை
ஆராய்கிறது

இன்னும் ஒருபடி மேலே போய்
மேலே மட்டும் திறந்திருக்கும்
வாசல் யன்னல் வழி
கையை நுழைத்து
கீழ் யன்னலைத் திறந்து
யன்னல் நிலையிலாவது
சாவி இருக்கிறதா என்று
ஏங்கித் தவிக்கிறது

இன்னும் மலையுச்சிக்கே போய்
பரணி பாடிய
செயங்கொண்டார் பாணியில்
‘செம்பொற் கபாடம் திறமினோ’ என்று
இப்படியாக கவிதையும் எழுதி
முடிக்கிறது.


2. திருவிளையாடல்

மரத்தால் செய்த அந்த மஞ்சள்நிற
அளவுகோலுக்குப் பெயரே
அடிஸ்கேல் தான்

கடிது ஓச்சி மெல்ல எறிதல் என்றால்
அது மஞ்சள்நிற ஒற்றை ரோஜாவை தனது கார்கூந்தலில் எப்போதும்
சூடி இருக்கும் கயல் மிஸ் தான்
ஓங்கி உள்ளங்கையில்
அடிப்பது போல் பாவனை காட்டி
பின் வலிக்காமல் கையில்
பூ உதிர சிரித்துக் கொண்டே
சின்னதாக தட்டுவது

பிரம்பு எல்லாம் பார்த்தது
உயர்நிலைப் பள்ளியில் தான்
மிஸ்கள் மாதிரி சார்கள் கிடையாது
அவர்கள் கடிதோச்சி
கடிதாகவே எறிந்து விடுவார்கள்
ஓங்கியபடியே
ஓங்கி அடித்துவிடுவார்கள்

பிரம்படி பட்ட கதை எல்லாம் திருவிளையாடல் தான்
அதைக் கவிதையாக எழுதும் போது எல்லோரும் பரஞ்சோதி தான்

கயல் மிஸ்கள்
அன்றும் இன்றும்
நெடிதாக்கம் நீங்காமை
வேண்டுபவர்கள்.


3. மழைப்பேச்சு

மழை இடியும் மின்னலும்
அச்சடிக்கும் புத்தகம்

ஒரு அச்சுப்பிழை கூட
இல்லாத புத்தகத்தை
வாசிப்பதைப் போலத் தான்
மழையை வீட்டின் முற்றத்தில் நின்று
ரசிப்பதும்

மழை நின்று பேசும் போது
வீதி எல்லாம் மௌனி ஆகும்

மழை ஆடும் நிகழ்ச்சியை
அவள் வீட்டின் குழாய்
தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தது

அவள் தன் உள்ளங்கைகளை மட்டும்
மழைக்கு நனைக்கத் தந்திருந்தாள்

பாட்டிக்கு மழை
ஒரு நாளை
ஞாபகம் வைத்துக் கொள்வதற்கான
குறியீடு

நான் பிறந்த அன்று
இப்படித்தான் மழை பெய்தது என்று
ஒவ்வொரு முறையும்
மழை பெய்யும் போது சொல்வாள்

அம்மாவுக்கு மழை
சம்பிரதாயத்தின் சட்டைப் பிடிப்பு

புழுங்கல் அரிசி தின்றால்
என் கல்யாணத்தன்று
மழை வரும் என்று
ஒவ்வொரு முறையும்
மழை பெய்யும் போது புழுங்குவாள்

அன்பே உனக்கு மழை என்பது
கவிதையின் தாட்சண்யம்

ஒருமுறை மழை வந்த போது
மழை வந்தால் தான்
மண்ணும் மலராகி
வாசனை வீசுகிறது என்றாய்

மறுமுறை மழை வந்த போது
மழை வந்தால் தான்
மண்ணும் தும்பியாகி
மழைத்தேனை உறிஞ்சுகிறது என்றாய்.


 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website