-
மீட்டலின் பொருட்டான வேண்டல்.
பதிலிடாது
அடைகாத்த மௌனம்
அலைக்கழித்துப்
பொறிக்கிறது
குஞ்சுகளை
அனவரதமும்
கேள்விகளாக
கிறங்கிட வைத்து.
அஃதொரு வினோதமாகக்
குஞ்சுகளும் முட்டையிட்டு
முழி பிதுங்க வைக்கிறது
முடிவுறாத வினையாக.
இத்துயர ஏற்பாட்டில்
மெலிந்திடும்
பலகீன கணங்களுக்குள் தவித்தலையும்
மீட்டலுக்கான
யாவும்
உன்னிடம்தான்
சிறு சமிக்ஞையானாலும்.
***
-
இதன் பொருட்டான இன்பம்.
சொல்லிவிட்டதான
நினைவிலிருந்தவனுக்குள்
ஒழிந்து கிடந்த
வார்த்தைகள்
உருவாக்கியது
பேசிச் சிரிக்கவுமான
தருணத்தை
பேசிடாமல் பயணிக்க.
வார்த்தைகளின்
தவத்திற்காய்
வந்தமர்ந்த
பூரிப்பிற்கு
விலை வைக்க முடியாது
கைபேசியுரையாடலை
கடந்த பிறகும்
வியாபித்து
விருப்பம் கொள்ள வைப்பதால்.
யுகப் பிரயத்தன
மெனக்கெடலில்
பீரிட்டெழும்
வார்த்தைகள்
வடிவமிழக்க நினைக்கிறது
வராமல்
ஆதி மௌனத்தை
சுவைத்து
அன்பில் திளைத்தொழுக
அழைத்து.
***
-
கொத்திப்பொறுக்கும் கொடுமையில்.
வதை முகாமிலிருந்து
தப்பியோட
பண்டிகைதான்
விசேட அனுமதியளித்தது
ஓய்வு பெற்றுத்
திரும்பி வர.
ஒதுங்கிய பால்ய பிரதேசத்தின்
காடும் மலையும்
காணக்கிடைக்காத
பறவைகளுமாகக்
கண்டபடியே
ஓடுகிறது
ஓய்வற்றதொரு
கிளர்ச்சி மகிழ்வில்
பொழுதுகள்
யாவும்
வதை நாட்களில்
வாடியதை
மறக்க வைத்து.
வியாபித்திருக்கும்
மலை முகடுகளின்
பால்ய சந்தோசங்களைக்
கொத்திப்பொறுக்கும்
பெருநகரத்தில்
பதுக்கித்தான்
பாதுகாக்க வேண்டும்
பிறிதொரு
பண்டிகை நாட்கள்
வரும் வரை
சேகரித்த சிற்றின்பங்களைச்
சிந்தாமல்.