காற்றில் அலைவுறும் சிறு இலைகள் போல
மிதக்கும் மொழி நீரில் ஏறி இறங்கிட
விட்டுச் செல்கிறேன் சில தாள்களை
முடியும் மட்டும் போகட்டும்
வண்டியில் பயணம் போகும் கரும்புத் தோகை
பாதை மண்ணோடு சரசரக்கும்
இரகசிய குழுஊக் குறி போல
வாழ்வோடு பிரயாணிக்கும் வார்த்தைகள்
பரந்து விரிந்த மொழியின் தளத்தில்
சோழிகள் ஆடி சலசலக்கட்டும்.
கண்ணுக்குத் தெரியா விதைகள்
இயற்கை கசிந்த நாளொன்றில்
இளஞ்செடியாய் அசையும் நடனம் போல
இறுகித் தட்டிய வெடிப்பு வாழ்வில்
புதைந்து போகும் சில கணங்கள்
உயிர் தரிக்கட்டும் மொழியின் வெளியில்.
முரட்டு வாசனை ததும்பும் வேர் முடிச்சுகளில்
ஒட்டியிருக்கும் செம்பழுப்பு மண்ணைப் போல
செப்பமிடா வார்த்தைகளின் பரப்பில் ஒட்டியிருக்கும்
அடியாழ நினைவின் பற்றுதல்கள்
சொற்களாய் உதிர்ந்தபடி இருக்கட்டும்.
மழை வற்றும் கோடையின்
இறுதி நாள் சொட்டும் மட்டும்.
Super akka