-
நிஜம் தோய்ந்த இந்த நாள்
குருதி கசிந்த காயத்திற்கு மருந்திட்ட நீ
கண் முன் நின்ற தெய்வம்
தேரைப் பற்றி இழுக்கும் உந்துதல்
மொழியற்ற இதழ் நடுங்கும் நொடிகள்
உரிமை கோரும் ஆசையை
விஞ்சிய வறுமைக்கு பலி
பார்வைப் பறவைகளோடு
விடைபெறும் சமாதானம்
இன்னொரு சந்திப்பிற்கு
ஏங்கி ஏங்கி
மெல்ல நகரும் ஆமை
காதல் கனத்த மனது
நிஜம் தோய்ந்த இந்த நாள்
காகம் உடைத்த
மலை உச்சியாக
சொட்டாங்கற்களாடும் நினைவு
-
காத்திருப்பின் கனம்
ஒரு காலத்தில்
ஏழு மலைகள்
ஏழு கடல்களைத் தாண்டி
இருந்த பூதம்
நல்லதைத்தான் செய்தது
இப்போது
காத்திருப்பு என்பது
வன்முறைக்கு
பழக்கப்பட்ட மிருகம்
மாதமொருமுறையே வாய்க்கும்
சந்திப்புக்கு
குறுக்குப் பாதைகள் இல்லை
உன்னோடிருக்கும் தருணங்களை நீட்டித்தல்
ஈசல் இறகுக்கு ஆயுள் கூட்டும் முயற்சி
மோகம் சூழ்ந்து
வதை முடிந்து விடுதலைக்குப்
பிறகும்
தடித்திருக்கிறது தேகம்
மழை நீரின் பிம்பங்களை
அழித்துப் பழகும்
காலம் நம் ஊடே
இடைவெளி உறங்கத் துவங்கி விட்டது
கண்ணீரின் வழி நடக்கும்
பிரிவின் துயர் மிகுந்த
குருதித் துளி
எந்த உறுப்பின் மிச்சம்
இத்தனைக்குப் பிறகும்
என் தோள் பற்றி
விடாப்பிடியாகத் தொங்குகின்றன
உன் விழியடையும் வேதாளங்கள்
-
தானாய் இருப்பது
யாருக்கும் ஒவ்வாத என்னை
எனக்குப் பிடிக்கும்
மற்ற பூக்களைப் போல்
சூரியன் தீண்டிய போதன்று
சிமிழ் உடைந்து உடைந்து
ஒரு பெரும் மழையில்
முகிழ் வெடித்து மலராவது
இயல்பல்லாத என்னை
காலம் திறந்து கொண்டாடுவது!!
-
இழப்பு
எதிர்ப்படும் மனிதர்களுக்கு கிடத்தப்பட்டிருக்கும் நான்
எடை கூடிய சவம்…
என்றாவது ஒரு நொடி
நீ என்னை நினைவில் ஏந்தும் வரை
சருகாகிய ஆன்மாவுக்கு
எந்த கணமும் இல்லை!!