ஊதப்படாத வெண்சங்கொன்று
வரவேற்பறையில் பல வருடங்களாக இருக்கிறது
சங்கு ஊதப்படவா பிறந்தது?
அதற்குள் வாழ்ந்த நத்தையோ…
அல்லது அதற்குள் உருவாகவிருந்த முத்தோ,
எங்கேயோ தவித்த படியிருக்கிறது…
யாருமே வெளிப்படுத்தாத காதலாக
சங்கினுள் ஓலமிட்டபடி அலமாரியில் தூசி படர்ந்து கிடக்கிறது!
வீட்டின் துக்க நாளில்
வாசலில் ஒலிக்கும் சக சங்கின் ஒலியையும் அடையாளம் காணத் தெரியாமல்!!
யார் வீட்டு குழந்தைக்குத்தான் ஆட வராது?
யார் வீட்டு குழந்தைக்குத்தான் பாட வராது?
யார் வீட்டு குழந்தைதான் சேட்டை செய்யாது?
யார் வீட்டு குழந்தைதான் அழாது?
எல்லோரும் என் குழந்தை பாடும் என்கிறார்கள்
எல்லோரும் என் குழந்தை ஆடும் என்கிறார்கள்
எல்லோரும் என் குழந்தை பயங்கர சேட்டை செய்கிறது என்கிறார்கள்…
அவர்களிடம் கேட்க இயலாமல் உங்களிடம் கேட்கிறேன்…
அப்படியிருந்தால்தானே குழந்தை?
வானம் மழையால் உலகை வாட்டர் வாஷ் செய்கிறது
சூரியன் காய வைத்ததும்
மரங்கள் துடைக்கின்றன
இதோ மீண்டும் செக்கச் செவேலென
“த்தூ” என்று துப்பி
கையால் மீசையைத் துடைப்பவனை
தீயோ மண்ணோ
விழுங்கிதானே துப்பும்?
பரட்டைத் தலையுடன் பாலிஸ்டர் சேலைக் கட்டிக் கொண்டு
பித்த வெடிப்பின் வலி மறந்து
நடந்து சென்று கொண்டிருக்கிறாள்
தன் குடும்பத்துக்காக
வியர்வை சிந்தும் ஒருத்தி!
போகும் வழி
வரும் வழியெல்லாம்
அவள் மீது விழும் காமப் பார்வைகளை
உதறித் தள்ளிவிட்டு
வீட்டுக்கு வந்ததும்
வலி போக்கும் மழலையை
தூவி வரவேற்பாள் அவள் மகள்!
ஹேண்ட் பேக்கிலிருந்து
ஒரு ரூபாய் எக்லேர்ஸ் இரண்டை எடுத்து அவளுக்குப் பிரித்துக் கெடுக்க அமர்வாள்
அழுகை வரும்
அமர்ந்தது தெரியும் வலியால்
மீண்டும் நின்றவாறு சாக்லேட்டை ஊட்டுவாள்!
எக்லேர்ஸை வாயொழுக்க
அரைப்பற்களால் மசித்து உண்ணும் அந்த பிஞ்சு மகளாக இருந்த காலத்தில்
அவளும் மகிழ்ச்சியாக இருந்த நினைவு!
தானேத் தனக்குப் பிள்ளையாகி போனதாகத் தோன்றிய நொடி
உச்சிமுகர்ந்து மகளுக்கோர் முத்தமிட்டால்
இவள் நெற்றியில்
சில்லென்று “பெயின் கில்லர்” இறங்கியது!!