-
தட்டி ஆச்சி*
நான் தவழத் தொடங்கிய காலத்தில்
தலை நரைத்திருந்தவள் அவள்.
தொடக்க முனையில் நான்
எதிரிடும் முனையில் அவள்
ஒரு வட்டம் முழுமையடைந்துகொண்டிருந்தது
எங்களிடையே.
எங்கள் வட்டம்
எங்கள் வெளி
தொடுபுள்ளியில் அவளைப் பற்றிக்கொண்டவள் நான்
என் உயிர் அவள்
அவள் உயிர் நான்
அவள் மின்னும் கருந்தேகத்தில் பைய
தோல் தளர்த்தி மிக்கின சுருக்கங்கள்
வட்டத்தில் வெளியேறும் வழியில்லையென நம்பி
அவள் கழுத்தைக் கட்டி இறுக்கிக்கொண்டேன்
ஓசையின்றி ஒரு நிழல் போல்
அவள் மேல் படர்ந்தேறி வந்த காலத்தை
பாம்படமாக்கித் தன் செவிகளில் அணிந்துகொண்டாள் ஒருநாள்
நான் ஊர்விடும் வரை
அவள் காதில்தான் ஊசலாடிக்கொண்டிருந்தது அது
அவள் இறந்துவிட்டாள் என்கிறார் அப்பா இன்று
நான் காணவில்லை
நான் நம்பவில்லை
எனக்கென அவள் வடித்த செவிகளை
இன்னும் இழுத்துப் பார்த்து
அவள் ஆயுளை நிறுத்துக்கொண்டிருக்கும் காலம் எங்கேனும்…
எனக்குத் தெரியும்.
காலத்தைப் பூட்டிக் கொண்டவளுக்கு
அழிவேது?
** தட்டி ஆச்சி – தென்னந்தட்டிகள் வேய்ந்த சுவர்கள் இரண்டு புறம் கொண்ட வீட்டில் இருந்ததால், நான் அவளுக்கு வைத்த பெயர் அது.
-
கல்லு முத்தம்
எனக்கும் மகளுக்குமான
முத்தப் பரிமாற்றங்கள்
பொருத்தப்பாடுகளால் பெயர் சூட்டப்பட்டவை
பூ முத்தம்
புல் முத்தம்
கிளியலகு
கன்றுக்குட்டியின் ஈரநாசி
தும்பிக்கை
அணில் கொறிப்பு
அவளுக்குப் பிடித்ததென்னவோ
‘கல்லு முத்தம்’தான் எப்போதும்
கன்னத்தைத் துளைப்பதுபோல்.
இன்றும்
கல்லு முத்தமிட வந்தவளை மறுத்தேன்
வலிக்குதென்று.
‘சின்ன்ன்னக் கூழாங்கல் முத்தம்தான்’ என்கிறாள்.
அவள் பெருவிரல் ஆட்காட்டி விரலுக்கிடையில்
அரூபக் கூழாங்கல் மினுங்கிற்று.
சரியென்கிறேன்.
கூழாங்கல் கன்னத்தில் படிகிறது
அத்தனை குளிர்ச்சி
அத்தனை மிருது
பருப்பொருளாகக்
கையில் ஏந்திக்கொள்ளலாம் அம்முத்தத்தை
அத்தனை சத்தியம்.
குட்டி நதியை மடியிலள்ளி
அது ஏந்தித் தந்த கூழாங்கல்லை
மெல்ல அதனிடமே நழுவவிடுகிறேன்
மீண்டும் மீண்டும்.
க்ளக்… க்ளக்… க்ளக்…
நெஞ்சு நிறைய
அத்தனை ஆனந்தம்.
-
எதுவோ என் மூளையை நிரலமைத்திருக்கிறது
ஆதிஞாபகமற்ற அப்பாடல்கள்
சுழற்தடத்தில்
நினைவில் ஒலிக்கும்
தினமொருமுறை.
அதுதவிர
சிக்கல்களற்ற எளியமனம்தான் எனது .
இசை ஞானமில்லா மனத்துக்கு
ஏனோ அப்பாடல்கள் மேலொரு பித்து.
மனக் கித்தானில் நீர்வண்ண அமைதி
உருவெளி ஓவியத்தில்
ஆளரவமற்ற வீடு
உச்சிவேளை நல்வெயில்
நிழல் சுருங்கி நிற்கும்
முன்றில் மகிழமரம்
கேணி நீரை வாரி
முற்றமெங்கும் இறைப்பேன்
வெயில் நீரில் விழவேண்டும்
அதுதான் பதம்
அதுதான் வேளை
கிறங்கக் கிறங்க மேலெழும்
அப்பாடல்கள்
அப்பாடல்கள்.
**
மத்தியானங்களுக்கு மட்டுமென
எனக்கொரு மனம்
மேகங்களாக அலைந்து
உருவெளி ஓவியத்தைத் தேடும்
ஆளரவமற்ற வீடு
நீரிறைத்த முன்றில்
வெயில் விளையாட்டு
அப்பாடல்கள்
அப்பாடல்கள்
நானறியாமல் எனை
மகிழமரத்தடி கொண்டு சேர்க்கும்
நனவிலிப் பயணங்கள்
**
பூமி சுற்றும் லயத்தில்
எத்தனையோ வழிப்போக்கர்களின்
எத்தனையோ பாடல்கள்
ஏனோ இப்பாடல்கள்தான் என் பித்து.
ஒரு வழிப்போக்கன் அவற்றிலொன்றைப்
பாடிப் போனான் ஒருநாள்
அவனிடம் இன்னொரு பாடல் கேட்டேன்
பிறகொன்று
மற்றொன்று
மேலும் ஒன்று
கேட்ட பாட்டெல்லாம் பாடியவன் கேட்டான்
ஏனெனக்கு அவை மட்டும் பிடிக்குதென.
இவை பாடல்கள் இல்லை
நீர் தளும்பும் கேணி
நிழல் சுருங்கும் மகிழம்
நின்றெரியும் சூரியன்
என் மனத்தின் மனம்.
இல்லை
இவையெல்லாம் மோகன ராகம்
சிரித்துக்கொண்டே சொல்கிறான்
வழி திரும்பும் பாடகன்.
விளையாட்டாய்ப் பொறுக்கிக் கோத்த
என் கிளிஞ்சல் மாலை
மெருகூட்டிய நித்திலங்களாம்
சொல்கிறான் ஒருவன்
எத்தகைய நிகழ்தகவிது
குழம்பும் என் மூளை தன்னையே அஞ்சுகிறது
ஏதோ ஒரு மெய்நிகர் உலகில்
யாரோ நிரலமைத்து வைத்ததா தன்னியக்கம்?
இவ்வெளிய கோளில்
எளிய பாடல்களைக் கேட்டு வழியேகும்
சிக்கல்களற்ற எளிய மனமிலையா எனது?
நனவிலிப் பயணங்களை
அவசரமாக மீட்டுப் பார்க்கிறேன்
பாடல் நிரைகளினிடையே
கசிந்து இழைகிறது ஒரு மெல்லிசை
மோகனமா… தெரியவில்லை எனக்கு.
தன்னியல்பின் சாத்தியங்கள்
என் பூமி சுழலும் அச்சு
இவ்விதம் அதை நொறுக்காதே, மோகனமே!
-
என் தெரபிஸ்ட் பெயரை மறந்த தெரபி
என் தெரபிஸ்ட் பெயரை ஒருநாள்
தற்செயலாக மறந்துபோனேன்…
என் யானையைத் தொட்டுத் தடவிப் பார்க்கச் செய்பவர் அவர்தான்
அவர் பெயரை
மறந்துபோனேன்
மறந்தே போனேன்.
எத்தனை யோசித்தும் பிடிகிட்டவில்லை.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்?
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
யானையின் ஈரமூச்சு கையருகில்
மகிழ்ச்சி துக்கம் விடுதலை ஆசுவாசம்
மாறி மாறி எழுகிறது
ஒரு தெரபி அமர்வில் இருப்பது போலவே.
கரும்பெரும் உரு இப்போது
கண்களில் புலப்படுகிறது மெதுமெதுவாக.
என் யானைதான் எத்தனை அழகு
சீரற்ற அதன் ஸ்பரிசம் எத்தனை ஜீவன்
விளையாட்டாய் அதனைத் தூக்கப் பார்க்கிறேன்
எத்தனை லகு
என்னைத் தூக்கி முதுகில் ஏற்றுகிறது
தெரியாதனவெல்லாம் தெரிகிறது
மறைந்திருக்கும் அதன் சிறகுகள்கூட
குப்புறச் சாய்ந்ததன்
கழுத்தைக் கட்டிக்கொள்கிறேன்
தேம்பியெழும் பெருமூச்சு
புன்னகை
வீடடைந்த நிம்மதி
எல்லாமே நேராகிறது
தெரபிஸ்ட் பெயரை மறப்பது
இத்தனை நல்ல தெரபியா?
என்னால் நம்பக்கூடவில்லை.