cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

கல்யாண்ஜிக்காய் சில வரிகள்


1.கல்யாண்ஜியின் கவிதை

அறியாத ஒரு முகத்தைப்
பார்த்ததும் பிடிக்கும் மாயம்
ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது..
பெயர் தெரியாத நபரின் துக்கம்
கண்ணீரைப் பெருக்குகிறது..
யாரோ ஒருவரின் சந்தோஷம்
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது
கல்யாண்ஜியின் கவிதையை
ஞாபகப்படுத்தியபடி..

2. மயில் நிற்கிறது

பொதுவாக மயில் பார்க்கப் பிடிக்கும்
மழையைப் போல
கடலைப் போல
அருவியைப் போல
வனாந்தரத்தைப் போல
மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல
யானையைப் போல
மயில் பார்க்க ரொம்பவே பிடிக்கும்
கல்யாண்ஜியின் மயில் கவிதைக்குப் பின்
மயில் என்ன செய்து கொண்டிருக்கிறது
எப்படி நிற்கிறது
எவ்வாறு நடக்கிறது
என்று ரசிக்கவும்
நிரம்பப் பிடிக்கிறது,

3. வெறுமனே

வெறுமனே சும்மா வாசித்தாலே போதும்
கல்யாண்ஜியின் கவிதைகளை,
பெருமரத்தின் தாழ்ந்த கிளையொன்றில்
தானே ஊஞ்சல் கட்டிக்கொள்ளும் சொற்கள்
காற்றின் இசைவிற்கு ஏற்றாற்போல
மெதுவாக வார்த்தைகளாக
அசைந்தாடத் துவங்கும் !
வெறுமனே சும்மா இருக்கும் நேரத்தில் தான்
இப்படி வாசிக்கிறேன்
அதற்காகவேனும்…
கொஞ்சம் சும்மா இருக்க விழைகிறேன்!

4. கல்யாண்ஜி எனும் ஓவியன்

கலைஞன் தன் உணர்வுகளை
கலைகளின் வழியாகத்தானே பேசுவான்.
உளியால் செதுக்கிய வார்த்தைகள் போல
ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மறையாதுதானே.
வர்ணங்களால் வார்த்தைகளை நிரப்பி
எழுத்தில் மாயங்கள் செய்திடும்
கவிதைகளின் ஓவியன் கல்யாண்ஜிக்கு
சரியாகத்தான் வாய்த்திருக்கிறது மற்றொருபெயர்
வண்ணதாசன் என்று!

5. புன்னகை

புன்னகைப்பவர்களை எப்படிப் பிடிக்காமல் போகும்?!
புன்சிரிப்பிற்கு எப்படி பதில் நகை கொடுக்காமல் போவது?!
சிறு முறுவலில் எல்லா சிக்கலும் தீர்ந்துபோகும்தானே!
சிரிப்பவர்கள் எப்படிச் சிரித்தாலும் சிரிப்பென்பது சிரிப்பேதான்..
குழப்பிக்கொள்ள வேண்டாம்
கல்யாண்ஜியை வாசித்த எல்லோர்க்கும்
ஈறு தெரியச் சிரிப்பவர்களை ரொம்பவே பிடிக்கும்!
எப்படிப் பிடிக்காமல் போகும் சிரிப்பவர்களை?
அதுவும் ஈறு தெரியச் சிரிப்பவர்களை..

6. அவரேதான்

தாமிரபரணி ஆறு தான்
குறுக்குத்துறை படித்துறைதான்
ஆமாம் திருநெல்வேலியே தான்
ஆமாம், ஆமாம் அவரே தான்
கல்யாண்ஜியே தான்
வண்ணதாசனே தான்
சந்தேகமே வேண்டாம்
நீரின் சலசலப்பிற்கிடையே தான்
அவர் தன் கவிதைகளின் நாதத்தை மீட்டெடுக்கிறார்.

7. மழைவரிகள்

சன்னல் வழியாகத்
தெரியும் மழைக்காட்சியிலும்
றெக்கை முளைத்த உள்ளங்கையில்
குதித்தோடும்
சாரலின் ஈரத்திலும்
படர்ந்து நீள்கின்றன
கல்யாண்ஜியின் மழைக்கால கவிதைகள்!

8. வானத்தைப்போல

இங்கேயே தான் கிடந்திருக்கிறது கல்யாண்ஜியின் கவிதைகள்..
நித்தம் தலைக்கு மேல் விரிந்திருக்கும் வானத்தைப் போல..!
அண்ணாந்து பார்க்கையில் தான் கண்ணில் படுகிறது
ஒவ்வொரு உருவமாய் உயிர்பெறும் சில அதிசயமும்
பின்னர் வானமும்..

9. எல்லாரையும் பிடிக்கும்

யார் அழைத்தாலும் பேசுகிறார்.
யார் கேட்டாலும் பதில் சொல்கிறார்
யார் எழுதினாலும் உற்சாகமூட்டுகிறார்
மனிதர்களை மட்டுமல்ல
பூனைகளையும்
அணைத்தே செல்கிறார்
எல்லாரையும் பிடிக்கிறது அவருக்கு
பின்
பூக்களை எப்படிப் பிடிக்காமல் போகும்?

10. கவிதைப்பெட்டி

புன்னகைக்க வைக்கும் சில…
புகழ்பாடச் சொல்லி நிற்கும் சில..
கண்ணீர் துளிர்க்க வைக்கும் சில…
உண்மையை உரக்கச் சொல்லும் சில…
அன்பை அள்ளித் தெளிக்கும் சில…
பராமுகத்தைப் பார்க்கும் முகமாய் சில..
கண்டும் காணாமல் கடக்கும் சில..
இப்படியான கவிதைகள் அனைத்தையும்
ஒரே பெட்டிக்குள் இட்டு வைக்கும்
மாயக்காரனை
இத்தனை நாட்களாய் அறியாமல் இருந்தேனே..
எதுவும் தாமதாகிவிடவில்லை
இப்பொழுது வாசிக்க ஆரம்பித்தாலும் போதும்..

11. எழுதுவோம்

எதையாவது எழுதியே ஆக வேண்டுமெனக் கட்டாயமா என்ன ?
கல்யாண்ஜி கவிதைகள் வாசித்தால்..
அப்படித்தான் தோன்றும்
எதையாவது எழுதிவிடப் பரபரக்கும் கைகளுக்கு
என்ன கட்டாயம் எழுதாமல் இருக்க?
எழுதித்தான் பார்ப்போமே!

12. முத்துக்கள்

வெயிலில் பறக்கும் வெயில்
கவிதைப்புத்தகத்தில்
ஐம்பது கவிதைகள் என்றே நினைத்தேன்…
மொத்தமாய் ஐம்பத்துமூன்று கவிதைகள்..
என்ன கணக்கென ஏன் ஆராய வேண்டும்?
கல்யாண வீட்டுப் பாயசத்தில்
அதிகமாய் உருண்டுவிழுந்து
சிரிக்கும் பூந்தியைப் போல
முத்தாய் சிரிக்கிறது
அந்த மூன்று கவிதைகளும்…

13. வெயில்

வெயிலில் பறக்கும் வெயில்
காலை இளவெயில் போலச் சிறிதாய்
உச்சிவெயிலெனக் கொஞ்சம்
நண்பகல் வெயிலாய் சில
மங்கிய மாலை வெயிலாய் மிச்சமென
முழு வெயிலையும் உணர்ந்து,
வெயிலில் பறந்த வெயிலெனச் சுற்றிச் சுற்றி வருகிறேன்..
பின்னால் பறந்து வரும் எழுத்துக்களைக்
குடையாய் பிடிக்க அவசியமற்றதாக இருக்கிறது
வெயிலில் பறக்கும் வெயில்.

14.பொய் கோபம்

இன்றுதான் வந்து சேர்ந்தது கல்யாண்ஜி கவிதைகள்..
அத்தனை மலை தாண்டி பெரிய கடல் தாண்டி
பத்திரமாக வந்து சேர்ந்தது
விசாவும், டிக்கெட்டும் தேவையிருக்கவில்லை.!
இத்தனை நாளா வருவதற்கு என்று கோபித்துக்கொள்வதா.. ?
இப்பொழுதாவது வந்தாயே என்று வாரி அணைப்பதா ?

15. கவிதையின் ருசி

ரொம்ப நாள் காத்திருப்புக்குப் பின்
கல்யாண்ஜியின் கவிதை வாசிக்கிறேன்..
ருசி பற்றிய கவிதையை வாசிக்கையில்
அந்தக் கவிதையை வாசித்த
பெயர் அறியாத பெண்ணின் குரல்
அனிச்சையாய் ஒலிக்கத் துவங்கியது மனதில்…
ரொம்ப நாள் வேண்டியிருந்திருக்கிறது
இந்தக் கவிதை ,கவிதைக்குரல்
எத்தனை ஆழமாய் மனதில் பதிந்துவிட்டதென அறிய…

16. கவிதை

கல்யாண்ஜி ஒவ்வொரு மனிதனையும்
புத்தகமாய் வாசிப்பதில்லை
கவிதையாய் கொண்டாடுகிறார்.
அதனாலேயே அவர் கவிதையில் வரும்
எல்லோரையும் பிடித்துவிடுகிறது.

17. ஒற்றை இலை

எத்தனையோ இலைகளுக்கு மத்தியில்
கவிஞரின் கண்களுக்குப் பட்ட
அந்த ஒற்றை இலையைப் போலத் தான்
எனக்கு அவர் கவிதை.

18. மாடக்குழி ஆச்சி

கல்யாண்ஜி எழுதிய
மாடக்குழி ஆச்சி – எனக்கு
என் ஆச்சி கூறிய
இறப்பில்லா மூதாதையரை நினைவூட்டினாள்.
வயதாகி, உணவு விடுத்து, மொழி விடுத்து
மாடக்குழிக்குள் அடைக்கலமாகும் ஆச்சிகளை
அப்பொழுதெல்லாம்
யாருமற்ற பொழுதில் தேடியிருக்கிறேன்…
இப்பொழுதோ
மாடக்குழியைத்தான் தேடுகிறேன்.

19.சோப்புக்குமிழ்

யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே
சோப்புக் குமிழிகளை ஊதி உடைத்து
வானவில் வர்ணங்கள் கண்டு
விளையாடும் விளையாட்டைப் போலத்தான்
யாரின் அறிமுகமும் இல்லாமலே
கல்யாண்ஜியின் கவிதைகள் வாசித்ததும்
மீண்டும் மீண்டும் வாசிப்பதும்.

20. கவிதை

கவிதை – கல்யாண்ஜி
மனதை வருடிப்போகும்
நம்பிக்கையளிக்கும்
உற்சாகமூட்டும்
அந்த நாளினை அழகாக்கும்
மாயச் சொற்களே கவிதை
கவிதை – கல்யாண்ஜி


கவிதைகள் எழுதுவது மட்டுமல்ல, பிறர் கவிதைகளை வாசிப்பதும் அதன் அழகை உணர்வதும், ரசிப்பதும் , கொண்டாடுவதும் கூட ஒரு கலை தான். சில கவிஞர்கள் புனைவு, படிமம் , புரியக் கடினமான , எட்டாத சில வார்த்தைகள் கொண்டு கவிதைகளைச் செதுக்கி இருப்பார்கள். கல்யாண்ஜி கவிதைகளை வாசித்தால் கவிதை எழுத ஆசைப்படுவோர்க்கு எல்லாம் , தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். பழக்கமான, புழக்கத்தில் உள்ள எளிய வார்த்தைகளைக் கொண்டு அழகான மென் கவிதைகளை பூப்போல சொரிவார். கவிதைகளில் உலாவும் பூனைகளும், எதிர்வீட்டாரும், உப்பு விற்பவரும் நமக்குள் அன்யோன்யமாகிப் போவர். அவரின் கவிதைகளை வாசித்ததுமே எதையாவது எழுத மனம் பரபரக்கும். வார்த்தைகளில் வண்ணங்களையும், வண்ணதாசன் என்னும் பெயரும் கொண்ட கல்யாண்ஜி என்னும் காலக்கவிஞன் வரிகளைப் பற்றி எழுதிய சில வரிகள் தான் விமர்சனமாய்…!  

கவிதைகள் வாசித்த குரல்:
ராணி கணேஷ்
Listen On Spotify :

About the author

ராணி கணேஷ்

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ராணி கணேஷ், கணிப்பொறி அறிவியல் படித்து தற்சமயம் பப்புவா நியு கினியா தேசத்தில் சொந்த தொழிலை நிர்வகித்து அங்கேயே வசிக்கிறார்.பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். பள்ளிக்காலம் தொட்டே கவிதைகள், கட்டுரைகள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். இணையத்தில் கவிதை, திரைவிமர்சனம் என எழுதி வருபவர். சமூக சேவையில் விருப்பம் உடையவர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website