1.
வற்றிய நதிக்கரை கூழாங்கற்களைக் காய்ச்சியது மேல் திசை
இருளடைந்து
பெரும் ராஜ்யம் வீழ்ந்த பின்
கால்கள் குழறி
மலையடிவாரம் நோக்கி நகர்கிறேன்
மித மிஞ்சிய ஆறுதல் தருகிறது தென்காற்று
சீரற்ற செங்குத்தான பாறைகள் மீதேறி
மலை படுகையில் வடக்கிருந்தேன்
வாடை காற்று சூழ்ந்தது
நிகரற்ற ஒளியுடன் கருமேகங்கள் வழங்கியபடி இருக்கிறது
கீழ்த்திசை
2.
எச்சில் துப்பும் பாத்திரம் நிரம்பியிருந்தது
என் வயிறு போல
சிறுநீர் தாங்கிய பை பெருத்திருந்தது
வறண்ட நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது
அவ்வப்போது
உள்நாக்கு தொண்டைக்குழிக்குள் சுருங்கிக் கொள்கிறது
கடிகார முள் நகர்வு சத்தம் நரம்புக்குள் ஊசியெற்றியது
வைர இதய கொண்ட ஜீசஸ் காலண்டர் சுவர் உராய்வு
காதருகில் தொழிற்சாலை சங்கு ஊதியது
உயரமான மாடி
மலையுச்சி
விரைந்து ஓடும் தொடர்வண்டியிலிருந்து
தவறி விழுந்தபடியும்
தலை சுக்கு நூறாக தெறித்தபடியுமான
கனவிலிருந்து திரும்பத் திரும்ப எழுந்த படியே இருக்கிறேன்
யாரேனும் ஒருவர்
கடைசியாகத் தனது
சுட்டுவிரலைக் கொடுங்கள் அல்லது பிடித்துக் கொள்ளுங்கள்
3.
வழியெங்கும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறாய்
இடையிடையே வசைச் சொற்கள்
பதில்களிலிருந்து எழும் கேள்விகள்
எண்ணிக்கையில் அடங்காதவை
பாதசாரிகள்
கேட்டும் பார்த்தும் பாராமல் சென்றார்கள்
சிலர் விலகி விலகாமல் நின்றார்கள்
வீதி ஆர்ப்பாட்டமின்றி ஆர்வமுற்றிருந்தது
வந்ததும்
அறைக் கதவை தாழிட்டுக் கொண்டாய்
எனக்கான கதவுகளின்றி வெளியேறினேன்
சைக்கிள் சிறுவன்
வண்ண பலூன்கள் படபடக்க
கைகளை இறக்கையைப் போல விரித்து
‘உய்ய்ய்ய்ய்ய்.. ‘ என்றபடி கடந்தான்
‘உய்ய்.. ‘யில் பறந்தேன்