1. ஆர்த்தியின் கடிதம்
அன்புள்ள அப்பாவிற்கு
அப்பா எனக்காக இனி போராட வேண்டாம்
சாலை மறியல் செய்ய வேண்டாம்
அரசிடம் மன்றாடவும் வேண்டாம்
நீதித்தாயிடம் உதவி கோரவும் வேண்டாம்
நான் இப்போது கடைசி வரிசையில்
தான் நிற்கிறேன் அப்பா
எனக்கு முன்பாக ஆசிபா மற்றும் நிர்பயா அக்கா உடன் இருக்கிறார்கள்
கவலை வேண்டாம்
எனக்குப் பின்னால் இன்னும் ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கிறது
செயற்கைக்கோள் அனுப்பியதெல்லாம் போதும்
என் இடுப்பிற்குக் கீழ் மாட்டிக்கொள்ள
இரும்பு வளையங்கள் செய்து தாருங்கள்
மூச்சிற்கு முந்நூறு முறை
ஜெய் ஸ்ரீராம் சொல்லியும்
என்னைக் காப்பாற்ற
அயோத்தி ராமனும் வரவில்லை
ஏனைய கடவுள்களும் கூட
அப்பா எல்லா அம்மாக்களும்
மனிதர்களைப் பிரசவிப்பதில்லையென
என் மரணத்தில் தான் அறிந்தான்
அந்த விலங்குகள் என்னைப் புணர்ந்த போது
அந்த சாக்கடை மூட்டையிலிருந்து
என்னை ஏந்தியபோது காணாமல்
போயிருந்ததா என் கைச்சதை
நம்ப வேண்டாம் எனக்கான நீதியும்
அப்படித்தான்
அப்பா என் மார் கிழித்தார்கள்
துகில் உரித்தார்கள்
மானம் காக்க முற்பட்ட போது
என் உடல் ஒடித்தார்கள்
எனக்குத் தெரியும் அப்பா
இனி திருவிழா கூட்டத்தில் அழகிய உடையில் ஆடிக்கொண்டிருக்கும்
ஒரு பெண் பொம்மையை
பார்த்தால் உங்களுக்கு ஒருபோதும் இனி சிரிப்பே வராது
அப்பா
நஷ்ட ஈடு கொடுத்தார்களா
அதில் ஆயிரம் கஞ்சா மரம் நடுங்கள் அப்பா
அதன் அடியிலேயே இனி ஆயிரம்
ஆர்த்தியையும் நடலாம்
அப்பா
காமத்திற்குத் தான் சாதி மத இனம் வயதென
எதுவும் தெரியாது….சட்டத்திற்குமா
அப்பா நான் கனி தராத மரம்
என் உடல் முழுவதும் இப்போது முளைத்திருக்கிறது கஞ்சா விரல்கள்
அப்பா
இந்த மண்ணில் தானே புதைத்தீர்கள்
எனக்குப் பிடித்த பொம்மையை
எனக்குப் பிடித்த ஆடையை
எனக்குப் பிடித்த சாக்லேட்டை
எனக்குப் பிடித்த அணிகலன்களை
மற்றும் என்னை.
2. மானம்பூ
நல்ல ஹேண்ட் பேக் வாங்கி வந்து
ஒவ்வொரு நாளும் நல்ல நிகழ்விற்கு
சென்றேன்
எல்லா நிகழ்விலும் கண்களைத் துளைத்தது அது
வெள்ளி நிற தோலில் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது
அது என் ஆன்மாவின் நிறத்தையொத்திருந்தது
தங்கையைப் போல அதில் முகப்பூச்சு வண்ணங்கள் எடுத்துச் செல்லவில்லை
பக்கத்து வீட்டு மாலாவைப் போல
பணப்பையும் அதிலும் இல்லை
ரயில்வே ஆபிசரின் மகளைப் போல
கிரெட் கார்டுகளும் இல்லை
அத்தனை அதிசயமிக்க ஒரு
ஹேண்ட்பேகில் தான் எனக்கான எல்லாமுமிருந்தது
அம்மாவின் மருந்து சீட்டு
அப்பாவின் கடன் அட்டை
மாதத்தவணை தொகையின் அடையாள சீட்டு
இண்டேன் கேஸ் அட்டை
ஒரு பக்கம் காணாமல் போயிருந்த ஹெட்செட்
ஒன்றிரண்டு ரூபாய்கள் அடங்கிய சிறிய பை
இவை இல்லாமல் போனால்
சற்று நேரத்தில் நான் வேறு உலகத்திற்கு
சென்றுவிடுவேன்
ஒரு துயரம் மிகுந்த ஹேண்ட்பேகை திருடனிடம் பாதுகாத்துக் கடந்து வந்துவிட்டேன்
நள்ளிரவில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் தந்தை இல்லாத பெண்கள் மட்டும்
சில வேசிச் சொற்களை ஹேண்ட்பேகில் எடுத்து வருகிறார்கள்
இந்த துயரமிகு ஹேண்ட்பேக்கை
யாராவது திருடியிருக்கலாம்
இல்லை
கருப்பு வண்ணத்தில் ஒரு பேக்கை அணிந்திருக்கலாம்.
3. தோடயம்
என்னை உடைத்தவர்களின்
இருண்மையை எதிர்நின்று காட்டும் காட்சியது
மேசை மீது சூடேகும்
காப்புசீனோவின் வளைய வளைய
இதயங்களுக்குள்
ஒரு சிறிய கரண்டி கலைப்பது போல
என்னைக் கலைத்துவிட்டீர்கள்
சரி…
என் இருப்பை உணர்ந்துகொள்ள
எனக்கென்று இருப்பது இசையே
அதன் அவலங்களின் மீது நின்று
இப்போதைக்குப் பிடில் வாசிப்பவர்களின் விரல்கள் வேண்டுமெனக்கு
இப்பொழுது யார் கேட்டது இந்த இரக்கமற்ற இசையை
என் அங்கவடியின் நரம்புகள் சிதறி ஓடுகின்ற அளவிற்குச் சீறிக் கிழிக்கிறது
ஒவ்வொரு விரலாய் கீழிட்டும் மேலிட்டும்
விளையாடிக் களிக்கும்
எனக்கு இசையென்பது இப்போது துரோகச் சத்தம்
விரும்பும் இடத்தில் ஒலியாய் அமர்ந்து கொண்டு
ஒற்ற முலச்சிகளின் கூக்குரலில்
தோடயம் பாடும் போது மெல்ல விரிகிறது என் கல்யோனி
நான் குப்புறக் கவிழ்ந்திருந்தேன்
இனி துரோக ஒலியை யோனியும் மீட்டலாம்.