1
மழை முடிந்து
மழைக்கால ஈரம் முடிந்து
வெயில் வந்துவிட்டது
நீண்ட நாள் கழித்து வந்த உறவாய்.
தாவரங்களின் குளிர்ந்த பச்சைக்கு
மிளிர் இள நிற அழகூட்ட
ஓடியோடி வேலை செய்யும் வெயில்.
ஒரு வீட்டிற்குள் மறைந்தொளி(ர்)கின்றன
வெயில் வரைகிற பல வீடுகள்.
மரங்களின் கரங்களுக்கு அகப்படாமல்
மண்ணில் விளையாடத் துடித்து
நழுவி நழுவி விழும் வெயில் குழந்தைகள்.
பௌர்ணமி அருவியை அந்தச் சிறுமி
விழும் வெயில் என்றா சொன்னாள்?
வெயிலை மறுதலிக்கும் கண்ணாடிகள்தாம்
வெயிலை இன்னும் அழகாக்கும் விந்தை
வெயில் ஊடுருவ உதவிய ஜன்னல்கம்பிகள்
ஜன்னல் கம்பிகள் சாய்ந்துறங்க உதவும் வெயில்
வெயிலின் மொழி வெளிச்சம் என்றால்
அதன் ஒலி கருமையல்லால் வேறென்ன.
2
பந்தலில் சரசரத்து ஓடுகின்ற அணில் போல
விளையாடிக் கொண்டிருக்கிறது வெயில்
ஆள் சத்தம் கேட்டதும் விரைந்து மறைந்து
என்ன சப்தமென மீளத் திரும்புகிறது.
சிறு குழந்தையின் நின்றொலிக்கும் சதங்கை போல
ஆங்காங்கே வட்டப் பொட்டுக்களைச் சிதறிக் கொண்டே போகிறது
சதுரங்கக் காய்களாடும் இந்த வெயில்.
வெயிலை எதிர்பார்த்து ஏமாந்து
எதிர்பாராக் கணமொன்றில்
பளபளக்கும் அணில் கருங்கண்ணில்
ஒளிகிற வெளிச்சத்தைக் கண்டுகொண்டேன்
இப்போது நானும் விளையாட்டில்.
என் தலை மேல் விழுந்து
உள்ளங்கையில் தவழ்ந்து
விரல்கள் வழி தரையில் நழுவிப் போகிற
இந்த வெயிலை
நான் திரும்பிப் பார்க்கப் போவதில்லை
செடிகளில் பூத்திருக்கும் பூக்களின்
அதி அழகுப் பரவச வெளிச்சம் வழி
தேடட்டும் என்னை சிறிது நேரம்.
3
வெயிற் பொழுதில்
தன்னை மேலும்
பளபளப்பாக்கிக் கொள்கிறது
பசிய இலை நுனியில்
ஒரு சிவப்பு வண்டு.
ஓயாமல்
மோதிப் பிரிந்து பறக்கும்
இரு இளம் பட்டாம்பூச்சிகள்
மஞ்சள் பொட்டுகளை
பகல் எங்கும் வைத்தபடி.
ஒளி மினுங்கும்
பளிங்கு நீர்க் குமிழ்களில்
தாமரை இலை எங்கும்
பகடை விளையாடும் காற்று
இணைக்கவும் செய்கிறது இறுதியில்.
புகைப்படச் சட்டங்களை
வெளியெங்கும் பொருத்திக் கொண்டிருக்கும்
வெயில் மட்டும்
கவனித்துக் கொண்டு இருக்கிறது
வேண்டுதல்கள் ஊசலாடும்
நீரற்ற கோவில் மரக்கிளைகள்
தாழ்ந்தபடி இருப்பதை.