cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

சட்டை வண்ண யானைகள்


ஒவ்வொரு முறையும் உன் மீது கொண்ட
என் பழைய காதலை ஒரு கையிலும் 
புதிதாக ஏற்பட்டுவிட்ட வெறுப்பினை மறு கையிலும்
ஏந்திக் கொண்டு
உன்னை எதிர்கொள்வது இயலாததாய் இருக்கிறது சகி. 

ஒரு காதலனும் காதலியும் 
தங்களுக்கு இடையிலான
பிரிவினைத் தாண்டி
வேறு என்ன பெரிய பரிசினை
தங்களுக்குள் பரஸ்பரம் அருளிக் கொள்ள முடியும்.
இருப்பினும், நான் அதன் பிறகும்
ஏதோ ஒன்றின் நிமித்தம்
ஒரு நித்ய வெறுப்பினை நமக்கே நமக்காக அளித்தது மட்டும்
ஒரு மறுக்க முடியாத வாஸ்தவம்தான்…

இனியும் சுமக்க முடியாத 
அந்தப் பாரத்தை இறக்கி வைக்கத் தோதாய்
என் முன்னே விடிகிறது
உனக்கே உனக்குப் பிடித்த
அந்த ஞாயி(ற்)றுடன் ஒரு நாள்…
நானோ உனக்கு மேலும் பிடிக்கும்
யானைகளாலான ஒரு புதுச் சட்டையைப் போட்டு வந்து
உன் முன்னே நின்றேன்; எதையும் பேசாமல்.

அந்தத் தருணம், நீ துணுக்குற்றாய்;
உள்ளூர ரசித்தாய்;
என் பாரமும்
உன் பாரமும்
நம் பாரமும் அடை மழை
ஓய்ந்த பிறகுச் சிந்தும்
மழைச் சொட்டுகளைப் போல
விழுந்து கரைந்தன வெளியில்…
மேனி மீதிருந்த யானைகளோ
லேசாகி மிதந்தன நித்தியத்தில்…

**

வண்ண வண்ண நிறங்களாலான யானைகளை
உனக்காக நான் சுமந்து வருகிறேன்
என் சட்டையில்
அவ் வேழங்களின் சின்னச் சின்னத் தந்தங்களும்,
சன்ன சன்ன துதிக்கைகளும்,
மௌனமான பிளிறல்களும்
நமக்கிடையில் விலகலின் காரணங்களைத்தான்
இன்னமும் கதைத்துக் கொண்டிருக்கின்றனவா; சகீஇ??? 

**

என் சட்டையின் யானைகள்…
உன்னை நினைத்து ஏங்கும் போது
என் மேனியைத் தீண்டும் உன் பருவ
இதழ்களாகவும்,
உன்னை நினைத்துக் கேவும் போதோ
மென் தோல் வெடிப்புற்று எரிச்சல் தரும்
புண்களாகவும் ஸ்திதி மாறுகின்றன…

அதே யானைகள்தான்
என் மேனியின் மீது நடக்கும் போது லேசாகவும்
கழற்றி அப்புற வைக்கும் போது,
என் அறையையே தாழ்த்தும் கனமாகவும் மாறுகின்றன…
நீ சொல், நமக்கிடையே நாம் வேண்டுவது நேசமா.. பிரிவா…
சந்தேகத்திற்கு இடமில்லாமல் இரண்டும்தான் இல்லையா சகீஇ…

**

உனக்கு யானைகள் என்பவை என்ன சகி…??
ஊர்ஜிதமாகச் சொல்ல முடியாவிட்டாலும்
நிச்சயம் என் சட்டை வண்ண யானைகள் மட்டும்
நம் காதலின் சுவடுகள் என்பதை
தீர்மானமாகவே இருவரும் அறிவோம் இல்லையா; தோழீஇ??


 

About the author

றாம் சந்தோஷ்

றாம் சந்தோஷ்

வேலூர் வாணியம்பாடியிலுள்ள உதயேந்திரம் கிராமத்தில் பிறந்த றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முக.விமல் குமார். ஆந்திரா மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழிபெயர்ப்பியல் துறையில் பட்டம் பெற்றார். திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 'நச்சினார்க்கினியரின் தொல்காப்பியக் கோட்பாடு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். சண்முக.விமல் குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார்.

சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை ’கண்ணீரின் நிறங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். தெலுங்கிலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து இலக்கிய இதழ்களில் வெளியிட்டுள்ளார். 'இடைவெளி' கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.
தமிழவன், ஞானக்கூத்தன், சி.மணி, ரமேஷ் பிரேம், ஆண்டாள், ஜெயங்கொண்டார் போன்றோரை ஆதர்சமாகக் கூறுகிறார். கவிஞர் அப்துல் ரகுமானை தொடக்ககால ஆதர்சமாகக் கூறுகிறார். தொல்காப்பியவியல், கவிதையியல், கலை, இலக்கியத் திறனாய்வு, கோட்பாடு, நாட்டார் வழக்காற்றியல், ஒப்பிலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website