சுந்தரப் புன்னகை
ஒழுங்கின் பரிபூரணம்
என் பாவனை
அசைவுக்கு அருகே தான்
நிறுத்திக் கொள்வதும் இருக்கிறது
முகம் கலையாமல் திரும்புகிறேன்
நெற்றிக் கோடுகளை
சடுதியில் இஸ்திரி செய்யும் விழிப்பு
நுண் திறவு
தோள்களில் உண்டு
நெஞ்சத்தில் மேடிட்டவன் யாகம்
முதுகு பாராத திரும்பலில்
மூத்தவன் சொன்ன நிமிர் இருக்கிறது
வயிரற்று இருக்க கற்றேன்
வாய் திறக்க வார்த்தை உற்றேன்
அளவின் அமைப்பில்
அழகோவியம் தேவையில்லை
அற்புத மனதில் கருங்கல் சிற்பம் நான்
சுவை பட சிரிக்கிறேன்
என்னைக் கற்பனைத்த உங்களிடமும்
கொஞ்ச நேரத்துக்கு அதே
சுந்தரப் புன்னகை…!
மெய்ப்பொருள் கற்றவை
எதையாவது சொல்லி
எப்படியாவது நம்புகிறேன்
எங்கிருந்தாவது திரும்பு- நான்
எங்கிருந்தாவது தொலைகிறேன்
உடைத்தலின் நலம் பற்றிய
உறுத்தல் நீ
வேர் காட்டும் அசைவு நான்
மிகைப்படும்
நகைத்தலின் ஞாபகம்
சூடுடையும் சுளீர் கடி
எறும்பென இருக்கலாம்
துரும்புக்கும் தன்னிலை
நின் பகல் என் இருள்
சேரும் புள்ளி திறவா தூரம்
கணம் நிறைக்கும்
கதவுடைக்கும் நிறத்தூவல்
சாயல் என எனை சாய்க்கும்
சாய்ந்த நொடி உனை காய்க்கும்
எப்பொருள் கூறும்
என்பொருள் மாறும்
அப்பொருள் அற்றவை
மெய்ப்பொருள் கற்றவை
பிறக்கும் உன் வெளியெங்கும்
பறக்கும் வெறுமை
நுரைக்கும் என் கரையெங்கும்
இருக்கும் உவமை
வினையற்ற எதிர் நிறைக்கு
வழியற்ற நேர் திரை
அப்படியே இருக்கலாம்
முன்பிருந்த வரிவரை
எப்படியும் திறக்கலாம்
இல்லவே இல்லை
நமக்கென்று வரையறை
இடைவெளியின் இன்னொரு லட்டு
கூட வெய்யிலிலும்
முத்தங்களில் இயற்கை வாசம்
முத்தமிட்ட பழைய நினைவுகளில்
எச்சில் ஈரம்
முத்தம் தொடாத புதிய வாழ்வில்
எத்தனை தூரம்
பார்த்துக் கொண்டே பார்வையில்
முத்தமிட்டுக் கொள்தல்
தனிமையின் மைம்மைக்
கொண்டிருக்கிறது
எங்கிருந்து வேண்டுமானாலும்
முத்தத்தை ஆரம்பிக்கலாம்
வெட்கப்படுவது அவரவர்
தூரங்களாலானது
இடைவெளியில்
முத்தமிட பழகிக் கொண்டோம்
முத்தம் என்பதை அவரவர் தேநீராக
பாவித்தல் சுலபம் தான்
தொடாமலே துலங்கும் முத்தத்தை
எவர் மீதும் பிரயோகிக்க
முடியும் என்பது
இடைவெளியின் இன்னொரு லட்டு !
ஆயிரம் நான்
புள்ளிக்கு முன்னும் பின்னும்
இருக்கிறேன்
புள்ளிக்குள் இருப்பது என் கொப்புளம்
கண்ணாடி முகம் எனக்கு
காணக் காண ஆயிரம் நான்
மரக்கிளை உதிர்க்கும்
துளிகளுக்குள் புரண்டு உருள்வது
சிரமம் எனக்கு
இலையென அலைபாயும்
என் தேகம் சுமை தான்
நம்புங்கள்
இழுத்தடிக்கும் ஜன்னலெல்லாம்
என் கண்களைத்தான்
சாத்துகின்றன
இடைவிடாத வெப்பத்துள்
வெறும் பாதங்களனைத்தும்
மிதித்து நடப்பது என்னைத்தான்
முற்றிலும் அது வற்றி போவது
ஈரத்தோடு நசநசத்து
கூட்டத்தில் உரசும் என் ஆழ்மனதை
இரவோடு சிமிட்டும் கருவிழிக்குள்
நான் என் மறுவிழிகளை
அசைக்காமலிருக்கிறேன்
அறுபட்டு தொங்கும் அந்தரங்க
மேடைக்கு
என் மூளை மடிப்பின் ஏணிப்படிகள்
நின்று நிதானிக்க
எப்படியாவது ஏணி பொருத்தத்தான்
இக்கடைசி வரியையும் எழுதுகிறேன்….!
கூட்டு நீச்சல்
எல்லாரும் பேசி முடிவுக்கு
வந்தபோது மணி
12 ஐ தாண்டியிருந்தது
சிலபோது தோன்றும் தான்
ஞாயிறும் அதன் சகவாசங்களும்
தேவைதானா என்று
சப்புக் கொட்டும் நா நாவிலா
மூளையின் மூலையில்
அதற்கு பாம்பு நாக்கு
சலிப்புத்தட்டும் வாரத்துக்கு
முகம் வழியும் அசடாட்டம் தான்
இந்த ஞாயிறு
துணி துவைத்த போது
எதிர்வீட்டுக்காரியின் மீன் தழுவல்
சத்தியமாக ராட்சச துவாரம் நிரப்பியது
சரி என்று
அப்படி வந்த முடிவுக்குத்தான்
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்
விஷயம் இது தான்
வாங்கப் போகும் அரைக்கிலோ மீனுக்கு
வீட்டில் நாங்கள் மொத்தம் எட்டு பேர்
பாட்டிமரம்
வேண்டுமென்று தான்
புதைத்தேன்
கண்ணீர் போதுமானதாக
இருந்தது
தொடர்ந்து பேசினேன்
முளைவிட்ட பிறகு
சிரித்தேன்
கதை பேசினேன்
கவிதை கூட கூறினேன்
கனவு போல மெல்ல வளர்ந்தது
காணும் காட்சிக்கு
காய்க்கத் தொடங்கியது
காற்றுக்கும் மழைக்கும்
கம்பீரமாய் கனன்று
கொண்டிருந்தன பழங்கள்
வரவே வராது என்றவர்கள்
எல்லாம் வேலி கட்ட
சொல்கிறார்கள்
வேலி எதற்கும் வேண்டாம்
என்பது தானே மானுட ருசி
இப்போது சொன்னாலும்
யாரும் நம்புவதற்கில்லை
புதைத்த பாட்டியை
வளர்த்தது மரமென்று….!
Courtesy : Painting – opensea.io