உன் நினைவுகளை
தைலமென தடவியவாறே
உறங்கிபழகிவிட்டேன்
நீ முற்றிலும் விலகிவிட்ட பிறகும்
வெற்று குப்பியின் அரூபவாசனை
போதுமானது இரவுகளுக்கு
நிலைக்கண்ணாடி முன்
நின்று கொண்டு
அவனை அவனே சுயமி எடுத்து கொள்கிறான்
கண்ணாடியை வாஞ்சையுடன் முத்தமிடும்
குழந்தையின் அழகு
அக்காட்சிக்கு
விழி இரண்டிலும் அஞ்சனம் தீட்டி
இமை ஓரம்
இரண்டு வால் வரைகிறாள் மகள்
நிலை கண்ணாடி நீருக்குள்
நீந்துகின்றன இரண்டு மச்சங்கள்
பால் வற்றிய முலைக்காம்பை
பருகும் சிசுவாய்
காய்ந்து சுணங்கிய மலர்களில்
தேன் தேடும் பூச்சியாய்
குழாயின் கடைசி சொட்டு நீரும்
தீர்ந்து விட்டபிறகு
அலகு உறிஞ்சும் காகமாய்
அதிகாலை விடியலில்
ஒளியிழந்து நிற்கும்
வெண் அச்சு நிலவாய்
தீர்ந்துவிட்ட காதலில்
சிநேகம் வேண்டி நிற்கிறாய்