1.
வெட்கத்தில்
சிணுங்கி
ஒருகை வைத்து
முகத்தை மூடினாள்
கொஞ்சமாய் தெரிந்த
மீத முகம்
பெருநாளின் அழகிய பிறை
2.
குண்டுகள் விழுந்து
இடிந்து போன வீட்டிலிருந்து
பாதி கிழிந்த
பள்ளிக்கூட பையை அழுதபடியே
சுமந்து வரும் சிறுவனை
நிறுத்துகிறான்
எதிரில் வந்த
பச்சைநிற சீருடை அணிந்தவன்
ஒரு கையில் துப்பாக்கியும்
மறு கையில் கொர் கொர் என்று
புலம்பும் வாக்கி டாக்கியும்
சிறுவனை பார்த்து
யார்நீ என்று கேட்கிறான்
பயந்து விழிகளை உருட்டியபடியே
அவனது பெயரை சொல்கிறான்
அதை கேட்கவில்லை
உன் கடவுளின் பெயரை சொல் என்கிறான்
தலைமீது பறந்து போன
விமானத்தைக் காட்டி
சாத்தான் என்கிறான்.
திரும்பவும் சத்தமாக
அவன்
கடவுளின் பெயரை கேட்கிறான்
புத்தகக் பையில்
படிந்திருக்கும்
இரத்தத்தை தொட்டு எடுத்து
அம்மா என்கிறான்.
3.
வானத்திலிருந்து
இடைவெளி இல்லாமல்
இயந்திர பறவைகள்
குண்டுகளை தூவிக்கொண்டே போகிறது
ஓவ்வொரு விதைக்கும்
மண் விலக்கி
ஓர் உயிர் முளைப்பது போல
ஓவ்வொரு குண்டுக்கும்
ஒரு உயிர்
மண்மூடிப் போனது
புதைந்த வீட்டின் மீது
பறவைகள்
“அது நாங்கள் இல்லை
அது நாங்கள் இல்லை”
என இறக்கைகளை நெஞ்சில் அடித்தபடியே
வட்டமிடுகிறது.