-
சமீபங்களைத் திறக்க முனையும்போது..
காகங்கள் கரைந்திடாத
எந்தப் பகலிலும்
அதுவரையில் விடமுடியாத
ஒற்றை சிறு சொல் அசைகிறது
மேஜையருகே
நிராகரிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மீது
புராதான மௌனத்தை எடுத்து வைக்கும்போது
நன்கு பழகிய நடைபாதையில் கேட்கிற
சன்னமான
காலடியோசையை
நகலெடுத்து காத்திருக்கிறது
புத்தி பிசகிடாத இன்றின்
நேற்று
ஆனால்
பக்கத்து அறைக் கதவை
தொட்டதும்
முடிந்துபோகிற அவை
பிறகெப்போதும்
வேறெந்த காரணங்களோடும்
கிளம்பிப் போவதில்லை
வேறு எங்குமே
********
-
புதிய வகைமைகள் இருந்திருந்தபோதும்..
பயண நோக்கின்
நேர்க்கோட்டை
அகன்றிடாதபடி
இழுத்துப்பிடித்துக்கொண்டே
பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள
எத்தனையோ இருந்தும்
பரிசளித்துவிடாமல்
மிச்சம் வைத்திருந்தோம்
கொஞ்சம் அவமானங்களை
கொஞ்சம் கண்ணீரை
கொஞ்சம் கருணையை
பிறகொரு நாள்
நம் நிறுத்தம் வந்த பின்பும்
அவரவர் திசைகளைத்
தேர்ந்தெடுக்கும் முன்னே
சற்றை நேரம்
காத்திருந்தோம்
வேறு எந்த புதிய சொல்லும்
உச்சரிக்கப்பட்டுவிடக்கூடாது
என்றே
மேலும் காத்திருந்தோம்