-
வராஹ
அல்லித் தண்டை உரசியும்
பூக்களையசைத்தும் இருப்பை சொன்ன
கெளுத்தியொன்றைப் பிடித்து
கிழக்கு பார்த்த
பாப்பாத்தியம்மாளுக்கு
சுட்டுப் படையலிட்டு
அவள் தாலிக் கொடியில் தொங்கிய
மஞ்சள் கிழங்கை
கேட்டு வாங்கினேன்
ஊமச்சி ஓடுகளைக் கோத்து
கிலிக்காட்டியும் கொண்டு வருகிறேன்
நண்டு பிடித்து கால்கள் புட்டெறிந்து
ஓமமும் மிளகும் கலந்தரைத்து
தீ மூட்டி
கொதி வரும் நேரத்தில்
மஞ்சளையரைத்து கிடாவுக்கு பொட்டிட்டு
அவித்தெடுத்த கொட்டிக் கிழங்கில்
குழம்பையூற்றிப் பிசைந்து
ஆளுக்கிரு கவளத்தை மூக்கொழுகத் தின்று கிடா மீதேறுவோம்
சுளுக்கி முனையை நெஞ்சிலேந்த
திருமுட்டத்து ஆதிவராஹன்
காத்திருக்கிறான்
ந்த…ந்த…
உர்…உர்…
-
முளை
அகாலத்தில் நாங்கள்
வலசைக்குத் தயாரானோம்
தானியங்கள் வெயில் குடித்துக் கொண்டிருந்த
மத்தியானத்தில்
கானல் நீரோடிய கறுப்பாற்றின்
வெம்மை தாங்காது
றெக்கைகளைப் புடைத்துத் திமிறினோம்
விலா எலும்புகளை வானவளுக்குக் காட்டி
மல்லாந்திருந்தான் மாமனிதன்
ராட்சத இரும்பு வண்டுகள்
பூமியைக் கிழித்தும்
மரங்களைப் பிளந்தும்
விளையாடிக் கொண்டிருந்தன
பெருங்காட்டின் சிற்றோடையில் இளைப்பாறி
வலசையிலிருந்து திரும்பினோம்
பிளவுண்ட பூமியும்
கிழிபட்ட மரங்களும்
ஈரமிழந்திருந்தன
உலோக மரங்களை
ஈயக் கொடிகள் இணைத்திருந்தன
உச்சியில் கூடேற்றி
நித்தமும் காடுகளைக் கழிந்தும்
ஓடையைப் பீய்ச்சியும் விட்டோம்
எங்கெங்கிலும்
வீசப்பட்ட பாதரச விதைகளிலிருந்து
உலோக மரங்கள் முளைக்கத் தொடங்கின.
-
ஜெய்பீம்
நெற்றியில் திலகமிட்டு
கையில் வாளோடு
துண்டிக்கப்பட்ட தலையையும்
கட்டை விரலையும்
கொண்டு வந்தானவன்
ஏகலைவன் விரலால்
சம்புகனுக்கு நாமமிட்டு
பாபரின் நெஞ்சைப் பிளந்தான்
குருதி வழியும் வாளை
என் கையில் தந்து
ஜெய் என்றான்
ஜெய் என்றேன்
கண்களை மூடி
வாளைச் செலுத்தத் தயாரானேன்
ராம் என்றான்
உரத்தக் குரலில்
பீம் என்றேன்
நட்சத்திரங்கள்
எனைச் சூழ
அவன் தலையைக் கொய்து
காட்டில் வீசினேன்
வனவாசத்திலிருந்து திரும்பிய ராமன்
பாங்கு ஒலிக்கும் நேரம் பார்த்து
பாபரின் வீடடைந்தான்
என் வாளில் நீலம் வழியக் காத்திருக்கிறேன்
ராமனின் தலையை அகற்றும் நாளுக்காய்.