-
தேகத் திரி பொருத்தி.
தனிமைத்
தனித்தலின்
காரணமறியேன்
முன் கிடக்கும்
உதிரப் பாடுகள்
தொடுமச்சம்
மேவிக் கிடப்பதால்.
ஓடி ஒளிந்து கொண்டதான நினைவின் ஆசவாச
இடுக்கு வழி
இருள் விலகலில்
பிரகாசிக்கிறது
அறையெங்கும்
பூரித்தல்
பரவசமெய்க.
ஒளி பருகத் திளைக்கும் இவ்வேளையில்
திரி கொளுத்தாத
தீவினை
இருள் கவ்விக்கிடக்கிறது
மீண்டுமொரு
யுகாந்திர துயரமாக
துலக்கமானதொரு பொழுதிற்காக
ஏங்கி.
***
-
நிலையாமையின் மெய்க் கூற்று.
பரிட்சையமான சில வார்த்தைகளுடன்
ஒப்புக்கொடுக்கப்படதாக
கழிகிறது
பொழுதுகள்
யாவும்
அன்றாடங்களுக்குள்
அநேக முரண்பாடகவே ஒத்திசைவற்று.
கண்டெடுக்காது போன
வார்த்தைகள்தான்
பதட்டத்துடன்
பணமீட்டிக் கொடுத்தது
ஓய்வு நாளுக்காக
ஏங்கிய முன் காலங்களில்.
களைப்பாறுதலின்
கருந்துளை
ஒவ்வாமை
பெருந்தொற்றைவிட
பேரவதியை கூட்டுகிறது
வணிகச் சொற்களில்
வாழ்வை மாற்ற
இம்சித்து.
நிலையாமையின்
நீட்சியாக
நகர்தல் சுகத்தில்
லயித்த மனம்
தருண சூழலை
தவிர்க்க நினைக்கிறது
நேருணர்வில்
நிலை கொள்ளாமல்
புற அரவம் மெய்தி.
சிதிலங்களில்
சிக்கி
நித்திலமெடுக்கும்
மெனக்கெடலில்
பாய்மரப்படகாக
பயணிக்கிறது
வாழ்க்கை
ஊதையின் போக்கில்
கரை காண
தத்தளித்து.
***
-
பாரிய வாசனையிலொரு பற்றுறுதி.
நினைவுகளில்
நீந்தி மகிழும்
இப்பொழுதுகளே போதும்
தூண்டிலிட்டெவரும்
துயரொன்றை
கொடுக்காதபொழுது.
ஆயாசம் கூடி
அலுப்புகள் மிகைக்கும் வேளையில்
அமர்ந்திருந்த
இடங்கள் போதும்
அம்மலர்கள்
அதே வாசனையில்
சுகந்தமிடுவதால்.
நீயற்ற பொழுதின்
சோம்பிடாதது பற்றியான
புறப்பொருமல்களுக்கிடையில்
சேமித்த மகிழ்வு
சிறு தொகையென
கூடுகிறது
யாதொரு பங்கமற்று.
இவ்வாறான பொழுதொன்றில்தான்
உன்னையும்
கடந்ததொரு சொர்க்கமாக
வாய்த்தது
பிறகான வாழ்வு சிறக்க
தோழமையான துணையொன்று
தகர்ப்பமைப்பில்
துளிர்த்து.