துணங்கை
பலிபீடத்தின் மீது நின்று
என் கீதங்களில்
ஒவ்வொரு எழுத்தாய் விம்மி கொண்டிருக்கிறது மாயை
இதழ் பொருத்தா முத்தங்கள்
இன்னும் இதழுக்குள்
நாம் அந்திகளில் பிறப்பெடுத்தவர்கள்
உலகம் இருளும் தருணம்
நம்மை காதல் விலா எழும்பிலிருந்து
உதறித் தள்ளிய போது
ஆழ்கடலின் வெப்பத்திலிருந்து
ஒரு சொல் கொடுத்தாய்
அதில் கிளிப் மாட்டியபடி அவதானித்திருந்தது காமம்
தூரத்து வினைமாண் விளக்குகளுக்கு
எங்கிருந்தும் காம நீர் சுரக்கும்
நம் சுரப்பிகள் காம தேவனின்
உதட்டிலிருந்து சுரப்பவை
மதன நீர் வெளியேறி
பித்தம் தலைக்கேறி உடலை அவிழ்த்து
பட்டற செய்திருக்கிறோம்
துணங்கை ஆடி ஆடி
வெளியேறுகிறது புணர் வாசம்
அரம்புலிகள் கொண்டு மூடிக்கொண்டோம்
அரம்புலிகள் கொண்டு மூடிக்கொண்டோம்
அத்தர்
சாயமற்ற காலங்களை இனி லாவண்டர் பூக்களால் அலங்கரித்து கொள்வோம்
சிட்டுக்குருவியின் முத்த ஒலிகளை
மாறி மாறி தந்து வனவொலி மீட்ட முடிவு செய்வோம்
நம் வனத்தில் கருஞ்சிவப்பு பறவைகள்
நடனமாடி களிக்கட்டும்
நாம் உடலால் ஒரு தூளி செய்து
காட்டு வாகையின் பின் தோளில் கட்டுவோம்
நீ இருந்த திசைக்கொரு மணம் அனுப்புகிறேன்
அத்தர் மணம் பின் தொடர்ந்து என் வனத்தில் வந்து விழு
காடத்தியை வணங்கிவிட்டு
விலா எலும்பு வலிப்பெற
ஒரு முத்தம் கொடுத்தால்
இப்போது
நான் உனக்கு தருவேன் அதிரூப பன்றியொன்றை
ஆண் மாகவிகளுக்கே எட்டாத மொழியின் அடி பாதாளத்திலும் முடி உச்சத்திலும் வெறிகூத்து ஆடுகிறார்கள் இளம் பெண்கவிஞர்கள். நான் எப்போதும் அவர்களிடமிருவ்து கற்றுக்கொள்வேவிரும்புகிறேன்.
கற்றுத் தெளிவதில்லை வாழ்வின் மொழி அதை வாழ்தலில் உணர்ந்துகொள் என எம்மைப் பார்த்து பெண்கவிதைகள் எள்ளி நகையாடுகின்றன. அவர்கள் “அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போல,” நித்தியமும் உடலாலும் மனசாலும் வாழ்வோடு ஒட்டி இருதலே மொழியின் தேடலின் உச்சமென்பதை அறி ந்திருக்கிறார்கள்.
சங்கத்தில் இருந்து இன்று வரையிலான பெண்கவிதைகளில் எது இல்லாவிடினும் வாழ்வு தூளி ஆட்டி கொஞ்ச்சிக் குலாவிக் கொண்டிருக்கும். பிரிய தர்ஷினியும் அவர்களுள் ஒருவர் – – வ.ஐ.ச.ஜெயபாலன் – கவி மொழி மாணவன்