cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 33 கவிதைகள்

சேலை நெய்தல்


கரையிலிருந்து புறப்படும்போது சேலையில் தொற்றிக் கொண்ட
சங்குப்பூச்சிகள்
ஓடம் நடுக்கடலுக்கு வரும் போது
முலைகளின் மீது
பசையை பூசியபடி ஊரத்தொடங்கின

அவள் மார்பிலிருந்து பிய்த்து எறிகிற
ஒவ்வொரு சங்குப்பூச்சியையும்
பிசுபிசுக்கிற முத்தமென
எம்பிக் கவ்வுகிறது கடல்

முழு நிலவின் ஓரமும்
கருங்கடலின் நடுவும்
விம்மிக் கொண்டிருக்கின்றன

சொத சொதக்கிற குளிருக்கு
இந்நேரம்
ஒரு கூடாரத்துள் இருந்திருந்தால்
கதகதப்பாய் இருந்திருக்கும் என்றேன்

துடுப்பைக் கெந்தி
ஓடத்தை உந்திக்கொண்டிருந்தவள் எழுந்து வந்து
உதடு மடிப்பை விரித்து
இறுகக் கட்டினாள் முத்தக்கூடாரத்தை
அதில் ஆங்காங்கே தெரிகிற பொத்தலில்
என் உதடுகளைப் பொருத்தி
சரி செய்தேன்

பாலையிலிருந்து
நெய்தலுக்கு அழைத்து வந்தவள்
பெருந் தாகத்தை
ஊற்றிக் கொடுக்கிற போது
அத்தனை புளித்தக் கள் வாடையும்
பிய்த்து எறிந்த சங்கு பூச்சிகளால்
அத்தனை பிசுபிசுக்கிற கடலும்
மனப்பிறழ்வையும்
உடற்பசியையும் கூட்டுகிறது

அவ்வளவு பிழை
அவ்வளவு பசி
எதுவுமே வேண்டாம்
எல்லாமும் வேண்டும்

என்னோடும் அவளோடும்
சிறுபாறையைக்சேர்த்துக்கட்டிகொண்டு
ஓடத்தைக் கவிழ்க்கிறாள்
காமத்தை
அவ்வளவு சுலபமாய்
மூழ்கடிக்க முடியாதென்று
ஆழத்தை
தொட்ட போது தெரிந்து கொண்டோம்

நங்கூரத்தை
சுற்றி வளைத்துக்கொண்ட
கடல் நாகமாய்
நெளிந்து கொண்டிருக்கிறது முத்தம்

முத்தமென்பது பிழை
முத்தமென்பது பசி
முத்த மென்பது
நான்கு சாவிகளைக் கொண்டு
இல்லாத பூட்டை திறக்க பிரயத்தனப்படுவது.


கவிதைகள் வாசித்த குரல்:
  வருணன்
Listen On Spotify :

About the author

ஜெயநதி .

ஜெயநதி .

கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், பேசும் புதிய சக்தி போன்ற இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website