பால்யத்தின் முத்த சிறகுகள்
நூலாம்படையின் கடைசி இழையில்
அறுபட்டுத் தொங்குகிறது
பகிராமல் திரிந்து போன
இளஞ்சூட்டு முத்தம்
கண்ட கணத்தில் குவிந்தன
உதடுகள்
வனம் தவறிய காட்டு மிருகத்தின்
நெடுநாளைய ஆதி தாகத்திற்கு
செழித்தோடிய நதியில் மீந்திருக்கும்
இறுதி ஈரம் தந்த மீட்சியாய்
முத்தத்தின் முதிய குரல்
ஒடிந்த சிறகுகளை சிலுப்பியடிக்க
சவர்க்கார குமிழியாய்
லேசாக மிதக்கிறது
பதப்படுத்திய பழைய சடலம்
மூப்பின் பேரிகையில்
உயிர்த்தெழுந்த பால்யத்திற்கு
அடையாளம் தெரியவில்லை
நடுங்கும் இரவின் மூலையில்
வாலாட்டி நிற்கும்
மரணத்திடம்
மறைப்பதற்கு
என்ன இருக்கிறது!
***
ஆந்தையின் விழிகள்
மௌன மழையின் அந்தரங்கத்தை
நுகர்ந்தும்
நுகராதது போல்
கண்ணை மூடிக்கொண்டு
கடக்க எத்தனிக்கும்
இவ்விரவின் மடியில்
புரிந்தும் புரியாதது போல்
புலம்பித் தள்ளுகிறது
ஆழ்மனதின் நிச்சலனம்
நடிப்பது போல்
நடிக்க பயிற்சித்து
எப்படியோ
நடிக்காதது போலவும்
நடிக்கப் பழக்கிவிட்ட
காதலின் பொருட்டு
நம் முதுகில் முளைத்திருப்பதென்னவோ
ஆந்தையின் விழிகள்
***
அம்மா
மரப்பெட்டிக்குள்
பத்திரமாய் கிடந்தே
பாழாகிப் போன துயரத்தால்
பங்கு கறிக்கு மொய்க்கும்
இறுதி காரியத்திலும்
எவர் கண்களிலும் சிக்காமல் தப்பித்த
இளம்பிள்ளை கல்யாண பட்டின்
ஜரிகை சயனத்தில்
பதவிசாய் கிடந்த
சிதையில் பொசுங்காத உலோக எலும்புகள்
இறங்கி வந்து
மூட்டுவலி தைலத்தைத் தடவிக் கொண்டு
மீண்டும் பெட்டிக்குள் படுத்தன
இறந்த
நிம்மதியின் நறுமணம்
இரவைப் புசிக்கத் துவங்கியது