1.
கடும் மன அழுத்தத்தில்
சாய்வு நாற்காலியில்
சாய்ந்தவாறு சாளரத்தினூடே தெரியும்
இலைகளால் சிதிலமாக்கப்பட்ட சின்னஞ்சிறு துண்டு வானங்களை
வெறித்துப் பார்த்த வண்ணமிருக்கிறேன்
காற்றுக்கசைந்து கொண்டிருக்கும்
Curtain வந்து கையை நீவிவிடுகிறது.
2.
மீச்சிறு அலட்சியமுமின்றி
மிகக் கூர்மையாகக் காத்திருக்கிறது பல்லி.
சற்றேயான தொலைவில்
மின் குமிழுக்கருகில் சுவரில் நிலை குத்தி நிற்கிறது தும்பி.
பல்லிக்கும் தும்பிக்குமிடையில்
கன்னத்தில் கை வைத்து
குந்திக் கொண்டிருக்கிறது வாழ்வு.
3.
வான்கோவின் நட்சத்திர இரவில்
தனித்து விடப்பட்டிருக்கிறேன்.
ஓவியத்திற்கு வெளியில்
என்னைப் பார்த்த வண்ணம்
அவன் இழுத்து விடும் புகை
காற்றில் என் துயரங்களை வரைந்து கொண்டிருக்கிறது.
தூரிகையை எடுத்து
நட்சத்திர வானில் நிலவொன்றை வரைகிறான்.
பழுப்பு நிறம் சொட்டுச் சொட்டாய்
என் மேல் விழுகிறது.
உடலெங்கும் பரவி
பழசாகிக் கொண்டிருக்கிறேன்.
நட்சத்திர இரவின் நிசப்தத்தில்
சல சலத்தோடும் நதியை
என்மேல் ஓட விடுகிறான்.
மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
நதியின் நடுவில் கிடக்கும்
பாசி படிந்த பாறாங் கல்லாகிறேன்.
4.
ஔிக் கதிரின் கூர் முனை,
பனித் துளியொன்றின் நுனியூடு பாய்கிறது,
வெடித்துச் சிதறி கால நதியாய் கிளைத்துச் செல்கிறது,
கிளைக்கும் நதிகள்,
வேர்களாய்ப் படர்கையில்
கால நதியோட்டம் கடக்கும் வழிகளில்
கூழாங்கற்களாய் உருண்டோடும் வாழ்வியல்கள்,
இடையிடை நதி எட்டிப் பார்க்கும்போது தென்படும் சிறு சிறு சந்தோஷிப்புகள்,
பெருங்கடலாய் விரிந்து எல்லையற்றுப் பரவுகிறது எங்கும்.
5.
காலத்தின் நீட்சியில்
பரந்து விரிந்து கிடக்கும் பெருவெளியில் காற்றின் மீதேறிக் கடந்து
புகை மூட்டங்களிடை பயணித்து
என் ஆதி மூலத்தைக் கண்டடைகிறேன்
அங்கு திராட்சை ரசக் கிண்ணங்களில் நிரம்பித் தளம்பும் என் மூதாதையரின்
பண்பாட்டைப் பருகுகிறேன்
நாடி நரம்பெங்கும் மூல வேர்கள் முறுக்கேறுகின்றன
கட்டியிழுத்து வந்து என் காலத்தின் கால்களில் கட்டுகிறேன்
கறுப்பு வெள்ளையாய்க் காட்சியளிக்கின்றன
ஓவியம் வரையாத தூரிகையால்
பல வர்ணம் தீட்டி மகிழ்வுறுகிறேன்
இது பின் நவீன காலம்.