சித்திரத்தின் மீது பரவும் விரல்
வரைந்துவிட்ட கோடுகளின் மீது
மடித்து வைத்து விளையாடுகிற
விரல்களைப் பெற்றிருக்கிறாய்
புள்ளியாய் தொடங்கிய நேர்கோடொன்றில்
தொடர்கிற வசதி பற்றுகிறது
இலக்குகளை
அடுத்தடுத்து என்றான அப்பட்டங்கள்
தொந்தரவுக்குள்ளாக்கும் ரகசியங்களை
அழித்து மேவிட அழைத்திருந்தேன்
வசதியின் நிறம்
என்னைக் காகிதமாக்கி கிறுக்கத் தொடங்கும்
கைகளை கிளைக்கச் செய்வது
உன் வருகையின் சாமர்த்தியம்
இல்லையென எடுத்துவைக்கும்
ஒவ்வொரு நிறத்திலும் தங்கிக்கொள்கின்றன
இடைவெளிகள்
பல நூறு பரபரப்பில் அலைந்து திரியும்
மௌனத்தின் மேல் அயர்ச்சி மேலிட
வேடிக்கைப் பார்க்க எடுத்துவைக்கும் நிறத்தில்
இல்லை சித்திரம்
*******
துணைக்கால்கள்
சத்தங்கள் ஆளும் இரவில்
பசிக்கும் குரலோடு துணைக்கு விழித்திருக்கிறேன்
பசி பயமாகி
பயம் கைவிடுதலின் நெடிய கரங்களுக்குள்
கிளைத்திருக்க
ஆளற்ற இடம்
அசைவற்ற காற்று
மௌனம் இசைய
உள் நுழைகிறது கவனமீர்ப்பு
ஒரு தற்காலிகம்
தந்துவிடும் நிம்மதி மேல்
பசியடங்க
பாதைகள் திறக்கிறது
செரித்தலின் ரகசியத்தோடு..
*******
வழி-புகழ்
என்னிடமுள்ள உன்னை
உனக்கே பரிசளிக்கிறேன்
திரும்பிப் போ
உன் செயல் முனை தடுமாறும்
உடல் மீது
நீ வடித்துக்கொள்ளும் தோற்றம்
பகடி செய்யும் காலத்தை கடக்கிறேன்
நீயறிந்து வைத்த நானில் இருந்து
ஒரு பார்வைக்கு நேராய்
எதிர்கொள்ள தவிர்க்கும் பார்வைக்கு மேல்
பரிசென்ன வேண்டும் எனக்கு
தவித்து அடங்கு
சொல் வன்மை ஓர் கூர் ஆயுதம்
குட்டப்பட்ட கைகள் கொடுத்து அனுப்பிய
முதுகு குத்தல்
அத்தனையும் பரிசுகள்
இறுதியாய் அன்பையா விலை வைப்பாய்
அட
என்று தோளாறுகிறது
நம்பிவிட்ட வழி
*******
நொடிக்குள் விரியும் வெளிச்சம்
விழித்திருக்கும் அநேக நாட்களில்
துடித்தபடி நகர்கிற
இரவின் கடிகார கால்கள்
சத்தமேற்று அலைகிற வெளிக்குள்
ஒப்படைக்க என்ன இருக்கிறது
உள்ளும் புறமுமான நிந்தனையில்
உதட்டின் மலர்தல் கோடுகள்
புள்ளியாக
அலைக்கழிப்பில் விடுபட
வசதியாய் சிறு அன்பு
பூனையின் காலேற்று வருமெனில்
ஒப்படைக்கலாம்
ஓயாத விழிகளை
உடையாத பொழுதுகளின் பிம்பத்தை
நகர்ந்துவிடாத நாளின் பரிதவிப்பை
புரிந்திடவே முடியாத மௌனத்தின் அவகாசங்களை
இன்னும் கூட
எனக்குள்ளே வைத்துக்கொள்ள தெரியாத
என்னை