நடுநிசி தாண்டிய
ஓசையற்ற…
நீர்க்குமிழி வீதியில்
அடையாளமற்றுத்
தொலைகிறேன்!
நீ வந்து சென்ற
தடத்தை…
காற்று உதிர்த்த
மாவிலை….
மொழி பெயர்த்திருந்தது!
சமீபகாலத்தில்
உந்தன்
நித்திய சொற்கள்
அந்நித்தியமாகி
நிற்பது…
கோவில் மாடப் புறாக்களுக்குப்
புரியாமல் இல்லை!
ஒருமித்துப் பயணிக்கும்
நடைபாதையில்…
யாரோ இசைக்கும்
கானல் வரி பாடல்…
நமக்கானது என்பதை
எப்படிச் சொல்லமுடியும்?
காய்ந்த பின்பும்
மணக்கும்…
மகிழும் பூவின் விசனத்தை
வரம் என்பதாகவே
கருதுகிறேன்!
நிழலாடும் பொழுதில்
மறக்காமல்…
திரும்பிப் பார்க்கிறேன்.
அங்கு எவருமில்லை!
நீண்ட நாட்களுக்களாகி
விட்டது!
பரவாயில்லை…
துருவ நட்சத்திரமாக…
உனக்கே தெரியாமல்
காத்திருக்கிறேன்.
தோன்றும் போது மட்டும்…
நீ பேசு!
அப்போது தான்…?
சாயல் இல்லாத
ஒரு புள்ளியில்
நிஜத்தை…
அவதானிக்க முடியும்!